தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்
திருமருகல் அருகே மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டச்சேரி:
திருமருகல் அருகே மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த மின்கம்பிகள்
திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் ராஜா தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்களின் நலம் கருதி திருமருகல் துணை மின் நிலையத்திலிருந்து சாலை ஓரமாக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு இப்பகுதிக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ராஜா தெருவில் உள்ள மின்கம்பிகள் சேதம் அடைந்து குடிசை பகுதிகளில் குடிசைகளை உரசும் அளவிற்கு தாழ்வாக செல்கிறது. இதனால் காற்று வேகமாக வீசும் போது தீப்பொறிகள் உருவாகி குடிசைகள் பற்றி எரியும் அபாய நிலை உள்ளது.
வாகனங்கள் செல்ல முடியவில்லை
மேலும் இந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் உள்ளது. அதனால் அவசர காலத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனம் கூட வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.