வயலில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்


வயலில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே அசிக்காட்டில் வயலில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் அருகே அசிக்காடு கிராமத்தில் வயல்வெளிகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அசிக்காடு கிராமத்தில், 1200 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பகுதியில் விவசாயிகளின் வயல்வெளிகளில் ஆங்காங்கே மின் கம்பங்கள் உள்ளன. இந்த மின்கம்பங்களுக்கு இடையே செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன.

இதனால் அப்பகுதி விவசாயிகள் தங்களது விவசாய பணிகள் செய்வதில் அச்சப்படுகின்றனர். மேலும் அறுவடை நேரங்களில் எந்திரம் மூலம் அறுவடை செய்யும் விவசாயிகள் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் எந்திரத்தை இயக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். தற்போது சம்பா சாகுபடி முடிவடைந்த நிலையில் விவசாயிகள் தங்களது நெல் வயல்களில் பயிர், உளுந்து உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளனர்.

குறுவை சாகுபடி

அதனைத் தொடர்ந்து குறுவை சாகுபடி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இப்பகுதிகளில் பல இடங்களில் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் விபத்து எதுவும் ஏற்படுமோ என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'மின்வாரிய துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து வயல்வெளிகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்' என்றனர்.


Next Story