தியாகதுருகம் அருகே உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்தடை பொதுமக்கள் அவதி
உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் மற்றும் நாகலூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 11-ந்தேதி(அதாவது நேற்று) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அப்பகுதியில் மின்நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தியாகதுருகம் மற்றும் நாகலூர் துணைமின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று காலை 7.15 மணியளவில் திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் வேலைக்குச் செல்லும் பெண்கள், விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரும் வேதனை அடைந்தனர். இந்த நிலையில் மதியம் 2 மணிக்கு மின்சாரம் வந்துவிடும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இரவு 8 மணியாகியும் மின்சாரம் வராததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். குறிப்பாக கை குழந்தைகள் வைத்திருப்பவர்கள், முதியவர்கள் மிகவும் சிரமம் அடைந்ததை காணமுடிந்தது. பின்னர் 8.10 மணியளவில் மின்சாரம் வந்ததையடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, உளுந்தூர்பேட்டையில் இருந்து தியாகதுருகம் மற்றும் நாகலூர் துணை மின் நிலையத்திற்கு மின்சாரம் செல்லும் உயர் அழுத்த மின்கம்பி தியாகதுருகம் அருகே மேல்விழி கிராமத்திற்கு செல்லும் சாலையில் திடீரென அறுந்து விழுந்தது. இதனால் தியாகதுருகம் மற்றும் நாகலூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் தடைபட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு அறுந்து விழுந்த மின் கம்பிகளை சரி செய்தனர். அதன் பிறகு மின்வினியோகம் செய்யப்பட்டது. மேலும் தியாகதுருகம் மற்றும் நாகலூர் துணை மின் நிலையத்தில் ஏற்கனவே அறிவித்தபடி மாதாந்திர பராமரிப்பு பணிகளும் நடைபெற்றது என்றார்.