கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்
வருகிற 10-ந் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த ேபாராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
வருகிற 10-ந் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த ேபாராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மாநில பொதுச்செயலாளர் சேக்கிழார் கூறினார்.
காத்திருப்பு போராட்டம்
விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:-
விவசாயிகளையும், சாமானிய மக்களையும் பாதிக்கக்கூடிய மின்சார சட்ட திருத்தம் 2022-ஐ திரும்ப பெற வேண்டும். மேலும் கடந்த 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய விகித மாற்றத்தினை உடனடியாக வழங்க வேண்டும். வாரியத்தில் உள்ள 58 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கேங்மேன் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 5,000 பேரை பணியமர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் ஜனவரி 10-ந் தேதியன்று அனைத்து தொழிற்சங்கத்தினரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தவும் வாய்ப்புள்ளது. எனவே தமிழக அரசும், மின்வாரியமும் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுக்குழு கூட்டம்
இதனை தொடர்ந்து தமிழ்நாடு விருதுநகர் மின் பகிர்மான வட்டக்கிளையின் பொதுக்குழு கூட்டம் திட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. மாநில நிர்வாகிகள் துரைப்பாண்டியன், ஞானகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராதாகிருஷ்ணன் செயல் அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் பாலசுப்பிரமணியன் வரவு, செலவு அறிக்கை வாசித்தார். மாநில நிர்வாகிகள் சேக்கிழார், மணிகண்டன், பாண்டியராஜ் ஆகியோர் அருப்புக்கோட்டை, ராஜபாளையம், விருதுநகர் கோட்ட நிர்வாகிகள் இளங்கோவன், மாயாண்டி, ராஜ்குமார் ஆகியோரை பாராட்டி பேசினர்.
இதனை தொடர்ந்து 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலைவராக இளங்கோவனும், செயலாளராக ஞானகுருவும், செயல் தலைவராக தங்கவேலும், அமைப்பு செயலாளராக ராதாகிருஷ்ணனும், பொருளாளராக பாலசுப்பிரமணியமும் தேர்வு செய்யப்பட்டனர்.