காய்கறி கழிவில் உரம் தயாரிக்க பயிற்சி
பழனி நகராட்சி சார்பில் காய்கறி கழிவில் இருந்து உரம் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பழனி நகரில் உள்ள 33 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகள் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு உரக்கிடங்கில் கொட்டப்படுகிறது. அங்கு குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது. அதேபோல் 'என் குப்பை என் பொறுப்பு' என்ற திட்டத்தின் மூலம் திறந்தவெளியில் குப்பைகளை கொட்டக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பழனி நகராட்சியில் உள்ள வார்டுகளில் காய்கறி கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பு குறித்து பெண்களுக்கு பயிற்சி, விழிப்புணர்வு ஏற்படுத்த நகராட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், பழனி நகராட்சியில் கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இந்நிலையில் கழிவில் இருந்து உரம் தயாரிப்பது குறித்த மாதிரி உருவாக்கி பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் மாடித்தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி, அதற்கான மானியங்கள் எவ்வாறு பெறுவது என்பது பற்றியும் விளக்கப்பட உள்ளது. அவ்வாறு காய்கறி கழிவில் இருந்து உரம் தயாரித்து தோட்டத்தில் பயன்படுத்தி ஆரோக்கியமான காய்கறியை பெறவும் ஆலோசனை வழங்கப்பட உள்ளது என்றார்.