பயிற்சி டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் ஊக்க தொகை வழங்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்:
கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் ஊக்க தொகை வழங்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
பயிற்சி டாக்டர்கள்
நாகர்கோவில் கோட்டாரில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். இவர்களுக்கு 4½ ஆண்டுகள் படிப்பும், ஒரு ஆண்டு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி டாக்டர்களுக்கு மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் ஊக்க தொகை வழங்குவது வழக்கம்.
ஆனால் தற்போது பணியாற்றி வரும் 71 பயிற்சி டாக்டர்களுக்கு ஊக்க தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே தங்களுக்கான ஊக்க தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் பயிற்சி டாக்டர்கள் தரையில் அமர்ந்து திடீரென உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இதுபற்றி பயிற்சி டாக்டர் ஸ்ரீலட்சுமி கூறியதாவது:-
ரூ.25 ஆயிரம் ஊக்க தொகை
நாங்கள் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்களாக பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு பயிற்சியின் போது ஒவ்வொரு மாதமும் 25 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகை வழங்கப்படும். ஆனால் இந்த ஊக்க தொகையானது கடந்த ஜூலை மாதம் 15-ந் தேதியில் இருந்து வழங்கவில்லை.
இதுதொடர்பாக கல்லூரி முதல்வரிடம் பலமுறை பேசி ஊக்க தொகை பெற்று தரும்படி கூறி இருக்கிறோம். எனினும் தற்போது வரை எங்களுக்கு ஊக்க தொகை கிடைக்கவில்லை. எங்களுக்கான உணவு மற்றும் தங்குமிடம் போன்றவை ஆஸ்பத்திரியில் இருந்து வழங்கப்படுவது இல்லை. நாங்கள் தான் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளோம். வீட்டு வாடகை மற்றும் உணவுக்கான செலவை நாங்களே பார்த்துக் கொள்கிறோம். இதனால் மிகவும் சிரமமாக உள்ளது. எங்களது பயிற்சி காலம் அடுத்த மாதம் 15-ந் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே எங்களுக்கான ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேச்சுவார்த்தை
பயிற்சி டாக்டர்கள் போராட்டம் காரணமாக ஆயுர்வேத ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கல்லூரி டீன் கிளாரன்ஸ் டெவி மற்றும் கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்குமார் ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இன்னும் 10 நாட்களில் ஊக்கத்தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பேசி இருப்பதாகவும் கல்லூரி டீன் கிளாரன்ஸ் டெவி கூறினார்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து பயிற்சி டாக்டர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த நோயாளிகள் அவதிக்கு உள்ளானார்கள்.