கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கள்ளக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மார்கழி மாத பிரதோஷ வழிபாடு நேற்று நடைபெற்றது. இதையொட்டி நந்தி பெருமானுக்கு பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நந்தி பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிவகாம சுந்தரி சிதம்பரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் ஏமப்பேர் ஏகாம்பரேஸ்வரர், தென்கீரனூர் அண்ணாமலையார், ஆலத்தூர், சோமண்டார்குடி ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
சங்கராபுரம்
சங்கராபுரம் சன்னதி தெரு மணிமங்களநாயகி சமேத சங்கரலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்திக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று சங்கராபுரம் முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவில், அ.பாண்டலம் அமிர்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர், மூக்கனூர் தாண்டுவனேஸ்வரர், மஞ்சபுத்தூர் கைலாசநாதர், வடபொன்பரப்பி சுப்ரீஸ்வரர், ராவத்தநல்லூர் வியாக்ரபுரீஸ்வரர், புதுப்பட்டு சொர்ணபுரீஸ்வரர், மூங்கில்துறைப்பட்டு முகிலேஸ்வரர், பாக்கம் சோளீஸ்வரர், ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே உள்ள பிரசித்திபெற்ற நஞ்சுண்ட தேசிக ஈஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சாமிகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் யோகநாயகி உடனுறை ஆத்மநாதசாமி, எறஞ்சி காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதர், வடபூண்டி கனகாம்பிகை சமேத கைலாசநாதர், வடதொரசலூர் பெரியநாயகி உடனுறை பழமலை நாதர், திம்மலை சிவக்கொழுந்தீஸ்வரர், குடியநல்லூர் கைலாசநாதர், முடியனூர் அண்ணாமலை ஈஸ்வரர், கனங்கூர் பர்வதவர்த்தினி சமேத ராமநாத ஈஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.