நீடாமங்கலம், குடவாசல் பகுதி கோவில்களில் பிரதோஷ வழிபாடு
நீடாமங்கலம், குடவாசல் பகுதி கோவில்களில் பிரதோஷ வழிபாடு
நீடாமங்கலம், குடவாசல் பகுதி கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நீடாமங்கலம்
நீடாமங்கலம் வட்டம் பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதர், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி விசாலாட்சி சமேத காசிவிசுவநாதர், பிரதோஷ நாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பூவனூர் கல்யாணி அம்மன் சமேத கைலாசநாதர் கோவில், நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோவில், நரிக்குடி எமனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குடவாசல்
குடவாசல் திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. அப்போது நந்தியம் பெருமானுக்கு கோவில் அர்ச்சகர் பிச்சுமணி சிவாச்சாரியார் பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம்-புஷ்ப அலங்காரம் செய்து தீபாராதனை காட்டினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியம் பெருமானை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார். இதேபோல் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவில், குடவாசல் கோணேஸ்வரர் கோவில், சத்ரு சம்ஹார மூர்த்தி கோவில், கூந்தலூர் ஜம்புகாரண்யேஸ்வரர் கோவில், சற்குணேஸ்வரபுரம் சற்குணேஸ்வரர் கோவில், சீதக்கமங்கலம் மூலநாதர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
திருமக்கோட்டை
திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலில் ஞானபுரீஸ்வரருக்கும், நந்திக்கும் பால், பன்னீர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், திரவியபொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிவனுக்கும், நந்திகேஸ்வரருக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.