சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்துள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்திபெருமானுக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலகரிக்கப்பட்டு, சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில், சின்னவளையம், பாப்பாக்குடி, மீன்சுருட்டி ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மீன்சுருட்டியில் சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள நந்திபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அரியலூரில் உள்ள கைலாசநாதர் கோவில், ஆலந்துறையார் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், சக்தி விநாயகர் கோவில், பொய்யாதநல்லூர் கைலாசநாதர் கோவில், ஒட்டக்கோவில் சிவன் கோவில் ஆகிய கோவில்களில் நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து பிரதோஷ நாயகர்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோவிலில் பிரதட்சணம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிரதோஷ வழிபாட்டு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதேபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்தரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில், மதனத்தூர் ராமலிங்கேஸ்வரர் கோவில், அருள்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள், நந்திபெருமானுக்கு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஜெயங்கொண்டத்தில் கழுமலைநாதர், சென்னீஸ்வரர், சோழீஸ்வரர், ஆண்டிமடம் அகத்தீஸ்வரர், செங்குந்தபுரம் ஏகாம்பரேஸ்வரர், தண்டலை திருமேனீஸ்வரர், மேலகுடியிருப்பு ஆவீஸ்வரர், புதுச்சாவடி கல்யாணசுந்தரேஸ்வரர், உட்கோட்டை அவதார ரட்சகர், உத்திரகுடி பசுபதீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்திபெருமானுக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.


Next Story