கள்ளக்குறிச்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


கள்ளக்குறிச்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தியம் பெருமானுக்கு பன்னீர், இளநீர், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிதம்பரேஸ்வரருக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் அமைந்துள்ள விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ பூஜை நடைபெற்றது. இதில் நந்திக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் நந்திக்கும், காசி விஸ்வநாதருக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதேபோல் தென்கீரனூர் அண்ணாமலையார் கோவில், ஆலத்தூர், சோமண்டார்குடி ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சங்கராபுரம்

சங்கராபுரம் சன்னதி தெரு மணிமங்களநாயகி சமேத சங்கரலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.இதையொட்டி நந்திக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் சங்கராபுரம் முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவில், அ.பாண்டலம் அமிர்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர், மூக்கனூர் தாண்டுவனேஸ்வரர், மஞ்சபுத்தூர் கைலாசநாதர், வடபொன்பரப்பி சுப்ரீஸ்வரர், ராவத்தநல்லூர் வியாக்ரபுரீஸ்வரர், புதுப்பட்டு சொர்ணபுரீஸ்வரர், மூங்கில்துறைப்பட்டு முகிலேஸ்வரர், பாக்கம் சோளீஸ்வரர், ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.


Next Story