கோவில்களில் பிரதோஷ வழிபாடு
கோவில்களில் பிரதோஷ வழிபாடு
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் ருத்ரகோடீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் கைலாச கோலத்தில் மேற்கு முகமாய் அமர்ந்து ருத்ரகோடீஸ்வரராக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருவது சிறப்பாகும். இக்கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு 108 லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மன்னார்குடி
மன்னார்குடியில் உள்ள அண்ணாமலை நாதர் கோவில், காமாட்சியம்மன் கோவில், நீலகண்டேசுவரர் கோவில், கைலாசநாதர் கோவில், மீனாட்சியம்மன் கோவில், காசிவிஸ்வநாதர் கோவில், ஜெயங்கொண்டநாதர் கோவில், பாமணி நாகநாதர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிவன் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியையும், சிவபெருமான் மற்றும் அம்பாளையும் தரிசனம் செய்தனர்.
நீடாமங்கலம்
நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதர், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விசாலாட்சி சமேத காசிவிசுவநாதர், பிரதோஷ நாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பூவனூர் கல்யாணி அம்மன் சமேத கைலாசநாதர் கோவில், நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோவில், நரிக்குடி எமனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.