சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
நாகை பகுதி சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
வெளிப்பாளையம்:
நாகை பகுதி சிவாலயங்களில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக காயாரோகணசாமி மற்றும் நந்திகேஸ்வரருக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, பச்சரிசி, இளநீர், தேன், பால், தயிர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நந்திக்கு வில்வ இலை மற்றும் அருகம்புல் மாலை அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதைப்போல நாகை அமரநந்தீஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், கட்டியப்பர் கோவில், நடுவதீஸ்வரர் கோவில், அழகிய நாதர் கோவில், வீரபத்திர சுவாமி கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் வண்ணமலர்களால் சாமியும், நந்திகேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பிரதோஷ நாயனார் புறப்பாடு நடைபெற்றது. இதைப்போல தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில், வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.