நாகை, வேதாரண்யத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி
தை அமாவாசையையொட்டி நாகை, வேதாரண்யத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கடலில் புனிதநீராடினர்.
தை அமாவாசையையொட்டி நாகை, வேதாரண்யத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கடலில் புனிதநீராடினர்.
தை அமாவாசை
பித்ரு லோகத்தில் உள்ள நமது முன்னோர்கள் தட்சிணாயன புண்ணிய காலமான ஆடி அமாவாசை நாளில் பூலோகத்துக்கு வந்து புரட்டாசி மாதத்தில் மகாளய பட்ச காலத்தில் நம்முடனேயே தங்கி இருந்து உத்தராயன புண்ணிய காலமான தை மாத அமாவாசை நாளில் நம்மை ஆசிர்வதித்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பி செல்வதாக ஐதீகம்.
நம்முடைய வீட்டிற்கு வந்து தங்கி விட்டு செல்லும் விருந்தினர்களை வழியனுப்பி வைப்பது போல பித்ரு லோகம் செல்லும் முன்னோர்களை நாம் தை அமாவாசை நாளில் மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைக்க வேண்டும்.
கடமை
நம்முடன் வாழும் நம் பெற்றோர்களுக்கு குழந்தைகளுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் இருப்பதுபோல, இறந்தவர்களுக்கும் நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. இறந்தபின் ஒரு குறிப்பிட்ட காலம்வரை நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அவசியம். அவரவர்கள் தங்களின் குடும்ப வழக்கப்படி வீட்டிலோ அல்லது ஆற்றங்கரைகளிலோ, கடற்கரையிலோ முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். குறைந்தபட்சம் எள்ளும் தண்ணீரும் விட வேண்டும் அவசியம்.
மாதந்தோறும் அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் குடும்பம் செழிப்பாக இருக்கும் என்பது ஐதீகம். தற்போது நவீன காலத்தில் மாதந்தோறும் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் தை, ஆடி மற்றும் மகாளயபட்ச அமாவாசை அன்று நீர்நிலைகளில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.
கடலில் புனித நீராடினர்
அதன்படி தை மாத அமாவாசையையொட்டி நேற்று நாகை கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமானோர் வந்தனர்.
தொடர்ந்து கடலில் குளித்துவிட்டு ஈர ஆடைகளுடன், கடற்கரையில் அமர்ந்தனர். மஞ்சள் கலந்த பச்சரிசி, எள், வெற்றிலை, பாக்கு, பூ, காய்கறிகள், பழம் உள்ளிட்ட பொருட்களை படையல் இட்டனர். தொடர்ந்து ஊதுபத்தி சூடம் ஏற்றி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
இதற்காக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 10-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல நாகை சுற்றியுள்ள பகுதிகளில், ஆறு வாய்க்கால்களில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
வேளாங்கண்ணி- வேதாரண்யம்
தை அமாவாசையை முன்னிட்டு வேளாங்கண்ணி அருகே காமேஸ்வரம் கடற்கரையில் ஏராளமானோர் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
கடலில் தை அமாவாசையையொட்டி இறந்து போன தங்கள் முன்னோர்கள் நினைவாக பிதுர் தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் கடலில் புனித நீராடினர்.
வேதாரண்யம் சன்னதி கடலிலும், கோடியக்கரை ஆதி சேது கடலிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர். வேதாரண்யேஸ்வரர் கோவில் மணிகர்ணிகை தீர்த்த குளத்தில் ஏராளமான பக்தர்கள் புனிதநீராடி, வேதாரண்யேஸ்வரரை தரிசனம் செய்தனர். இதையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தை அமாவாசையை முன்னிட்டு வேதாரண்யத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை வேதாரண்யம் நகராட்சி கோவில் நிர்வாகம், கோடியக்கரை ஊராட்சி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.