கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் வளாகத்தில் பெயிண்டால் வெள்ளை கோடு வரையும் பணி


கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் வளாகத்தில் பெயிண்டால் வெள்ளை கோடு வரையும் பணி
x
தினத்தந்தி 26 April 2023 12:45 AM IST (Updated: 26 April 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

வெயில் சூட்டில் இருந்து பக்தர்கள் தப்பிக்க கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் வளாகத்தில் பெயிண்டால் வெள்ளை கோடு வரையும் பணி நடந்தது. இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர்

வெயில் சூட்டில் இருந்து பக்தர்கள் தப்பிக்க கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் வளாகத்தில் பெயிண்டால் வெள்ளை கோடு வரையும் பணி நடந்தது. இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஆதிகும்பேஸ்வரர் கோவில்

கோவில்களின் நகரமாக கும்பகோணம் விளங்குகிறது. கும்பகோணத்தின் பிரதான கோவிலாக ஆதி கும்பேஸ்வரர் கோவில் உள்ளது. 1,600 ஆண்டுகள் பழமையான இக்கோவில் சம்பந்தர், அப்பரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மகாமகம் நடைபெறுவது தனி சிறப்பு. காசி, ராமேஸ்வரம், சிதரம்பரம் வரிசையில் 11-வது சிவதலமாக விளங்குகிறது. இங்கு மூலவராக ஆதிகும்பேஸ்வரரும், தாயாராக மங்களாம்பிகையும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

பக்தர்கள் வருகை

பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ள கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர்.

இதனால் கோவில் வளாகத்தில் எப்போதும் பக்தர்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் கும்பகோணத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.

வெள்ளை கோடு வரையும் பணி

தகிக்கும் வெயிலில் கோவில் வளாகத்தில் நடக்கும்போது சூடு தாங்காமல் பக்தர்கள் அவதிப்பட்டனர். இதனால் வெயிலின் இருந்து பக்தர்களின் பாதங்களை பாதுகாக்க கோவில் வளாகத்துக்குள் பெயிண்டால் வெள்ளை நிற கோடுகள் வரையும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கோடுகள் 3 அடி அகலத்துக்கு வரையப்படுகின்றன.

வெள்ளை நிற கோடுகள் மீது நடந்து செல்லும் போது பக்தர்களின் பாதங்கள் வெயிலின் வெப்பத்தினால் சுடுவதில்லை. இதன்காரணமாக தற்போது கோவிலுக்கு வரும் பக்தர்கள் மகிழ்ச்சியாக கோவில் வாளகத்தை சுற்றி சாமிதரிசனம் செய்து வருகின்றனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Next Story