சங்ககிரியில் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு குழந்தை திருமணம் செய்த உறவினர் மீதும் போக்சோ பாய்ந்தது
சங்ககிரியில் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீதும், அந்த சிறுமியை குழந்தை திருமணம் செய்த அவரின் உறவினர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சங்ககிரி,
17 வயது சிறுமி கர்ப்பம்
சங்ககிரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், 10-ம் வகுப்பு படித்துவிட்டு சங்ககிரியில் உள்ள கிளினிக் ஒன்றில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு வேலை செய்து வந்தார். அப்போது சங்ககிரி சந்தைபேட்டை பகுதியை சேர்ந்த கார்த்திக் விஜய் என்ற வாலிபருடன் அந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஈரோடு அழைத்து சென்று கார்த்திக் விஜய், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார்.
இந்த நிலையில் அந்த சிறுமியை, அவரது தாயார் சங்ககிரி அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று டாக்டரிடம் காண்பித்துள்ளார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக உள்ளதாக சிறுமியின் தாயாரிடம் கூறி உள்ளார்.
திருமணம்
இதனிடையே நேற்று காலை 6.30 மணியளவில் சங்ககிரி விநாயகர் கோவிலில் அந்த சிறுமியை உறவினரான 22 வயது வாலிபர் ஒருவர் அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
அதில், சிறுமியை கர்ப்பமாக்கிய கார்த்திக் விஜய், மற்றும் குழந்தை திருமணம் செய்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதன்பேரில் கார்த்திக் விஜய் உள்பட 2 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.