கர்ப்பிணி மர்ம சாவு
சங்கராபுரம் அருகே கர்ப்பிணி மர்மான முறையில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே மஞ்சபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகள் திவ்யா (வயது 23). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த உறவினரான கலியமூர்த்தி மகன் அருண் (32) என்பவருக்கும் கடந்த 10 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் திவ்யா 4 மாத கர்ப்பமானார். இருப்பினும் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் திவ்யா தனது கணவர் வீட்டில் பிணமாக தூக்கில் தொங்கினார். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாவில் சந்தேகம்
இது குறித்து திவ்யாவின் தாயார் ஜெயலட்சுமி போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதையடுத்து சந்தேகம் மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் திவ்யாவை யாரேனும் அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா?, அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருமணமாகி 10 மாதத்திலேயே திவ்யா மர்மமான முறையில் இறந்துள்ளதால், அவரது சாவு குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.