கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை
பழனி அருகே தீக்குளித்து கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகாா் கூறியுள்ளனர்.
தீக்குளித்து தற்கொலை
பழனி அருகே உள்ள ஆயக்குடி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சாகுல்அமீது (வயது 30). இவர், உணவு வினியோகம் செய்யும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி பெனாசிர் சித்திகா (24). இந்த தம்பதிக்கு 3 வயதில் மகன் இருக்கிறான். தற்போது பெனாசிர் சித்திகா 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
கடந்த சில நாட்களாக பெனாசிர் சித்திகாவுக்கும், சாகுல்அமீதுவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த பெனாசிர் சித்திகா, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சாவில் சந்தேகம்
இதுகுறித்து தகவல் அறிந்த ஆயக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் பெனாசிர் சித்திகாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் கூறி, பழனி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பெனாசிர் சித்திகாவின் உறவினர்கள் திரண்டனர். இதனையடுத்து போலீசார் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமாரும் அங்கு வந்தார். அப்போது அவரிடம், பெனாசிர் சித்திகாவின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதுபற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ. உறுதி அளித்தார். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரி வளாக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.