கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்க ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது-கலெக்டர் கார்த்திகேயன் தகவல்


கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்க ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது-கலெக்டர் கார்த்திகேயன் தகவல்
x

கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்க ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்று மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

திருநெல்வேலி

திசையன்விளை:

கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்க ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்று மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

கடல் அரிப்பு

உவரி அருகே கூடுதாழை மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 19 நாட்களாக மீனவர்களின் போராட்டம் நீடித்ததை தொடர்ந்து நடைபெற்ற சமாதான கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான ஏற்பாடுகளை சபாநாயகர் அப்பாவு தீவிரமாக முயற்சித்து வருவதாகவும், 3 மாதங்களுக்குள் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

ஆரம்பகட்ட பணிகள்

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் நேற்று மதியம் கூடுதாழையில் கடல் அரிப்பால் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மீனவர்கள் கூறுகையில், ''கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். இங்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும்'' என்றனர்.

பின்னர் கலெக்டர் கூறுகையில், ''கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் தூண்டில் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கும்'' என்றார்.

கூடுதாழை பங்குத்தந்தை வில்லியம், கிராம நிர்வாக அலுவலர் சாம்ராஜ் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story