பொங்கல் பண்டிகைக்கு மண் பானை, அடுப்பு தயாரிக்கும் பணி மும்முரம்
நீடாமங்கலம் அருகே ராயபுரம் கிராமத்தில் பொங்கல் பண்டிகைக்கு மண் பானை, அடுப்பு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மானியத்துடன் வங்கி கடன் வழங்க மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் அருகே ராயபுரம் கிராமத்தில் பொங்கல் பண்டிகைக்கு மண் பானை, அடுப்பு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மானியத்துடன் வங்கி கடன் வழங்க மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை
பொங்கல் பண்டிகையன்று மண் பானைகளில் பொங்கல் வைத்து படையல் போடுவது தமிழரின் பண்பாடு. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பெரும்பாலும் கிராமங்களில் பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தேவையான மண் பாண்டங்களை முன்கூட்டியே வாங்கி வைத்து மக்கள் வீடுகளை சுத்தம் செய்து பொங்கல் வைப்பது வழக்கமாக இருந்தது.
தற்போது பொங்கல் வைக்க பித்தளை, சில்வர் போன்ற பாத்திரங்களை பயன் படுத்துவதால் மண்பாண்ட தொழில் பாதிப்படைந்தது. ஒரு சிலர், மண் பாண்டங்களிலேயே இன்றும் பொங்கல் வைத்து வருகின்றனர்.
மணல் தட்டுப்பாடு
சமீப காலமாக மண்பாண்டங்கள் தயாரிக்க தேவைபடும் மணல், வண்டல்மண், வெள்ளை நைஸ் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.இதனால் தொழிலாளர்கள் பரம்பரை தொழிலான மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலை கைவிட முடியாமல் செய்து வருகின்றனர்.
இந்த தொழிலாளர்களுக்கு வேறு தொழிலும் தெரியாமல் உள்ளனர். தங்களது குழந்தைகளையாவது படிக்க வைத்து வேறு தொழில் செய்ய அனுப்புவதை குறிக்கோளாக கொண்டு, நகைகளையும் அடகு வைத்து மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மண் பானை தயாரிக்கும் பணி மும்முரம்
மண் பாண்டங்கள் மட்டுமின்றி அகல் விளக்கு, திருமணத்திற்கு தேவையான அரசாணி பானைகள், விளக்கு மாடம், மாட்டிற்கு தண்ணீர் வைக்கும் தொட்டி, வீட்டிற்கு தேவைப்படும் தண்ணீர் தொட்டி, கோவில் குதிரை சிலைகள், விநாயகர் சிலைகள் உள்ளிட்ட பல வகையான பொருட்களை தயாரித்து வருகின்றனர்.
நீடாமங்கலம் அருகில் உள்ள ராயபுரம், வீரவநல்லூர், வடகாரவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி மண்பானை சட்டி, அடுப்பு தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
மழையால் தொழில் பாதிப்பு
இதுகுறித்து ராயபுரம் கிராமத்தை சேர்ந்த ராமையன், சரோஜா கூறுகையில், கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக மண்பாண்ட தொழில் மிகவும் பாதிப்படைந்தது.இந்த ஆண்டாவது தொழிலை செய்யலாம் என்றால் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
வெயில் அடித்தால்தான் தயாரிக்கப்பட்ட மண் பாண்டங்களை காயவைத்து சூளையில் வைக்க முடியும். அதுவும் சூளை இடிந்து சேதமடைந்துள்ளது. சூளையில் வைப்பதற்கு ராட்டி, விறகு, வைக்கோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வங்கி கடன் வழங்க வேண்டும்
இதே போன்று தட்டுப்பாடு ஏற்பட்டால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எங்களுடைய பரம்பரை தொழிலான மண்பாண்ட தொழிலை பாதுகாக்க மானியத்துடன் வங்கி கடன் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மண் பாண்டங்கள் தயாரிக்கும் அனைவருக்கு செங்கல் சூளை அமைத்து தர வேண்டும் என்றனர்.