நெல்லையில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்ய திட்டம் தயாரிப்பு - கலெக்டர்
நெல்லை மாநகர பகுதியில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்வதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் விஷ்ணு கூறினார்.
குடியரசு தினம், உழைப்பாளர் தினம், சுதந்திரதினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்தநிலையில் மார்ச் 22 மற்றும் நவம்பர் 1-ந் தேதிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. கிராமங்களில் கிராம சபை கூட்டம் போல நகர உள்ளாட்சிகளிலும் மக்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதனை ஏற்று நகராட்சி மற்றும் மாநகராட்சிகளிலும் பகுதி சபா கூட்டம் நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி உள்ளாட்சி தினத்தையொட்டி நேற்று நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் முதல்முறையாக பகுதிசபா கூட்டம் நடைபெற்றது. நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 40-வது வார்டு பகுதியான பாளையங்கோட்டை அன்புநகரில் நடைபெற்ற பகுதிசபா கூட்டத்திற்கு கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். இதில் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் குடிநீர் பிரச்சினை, பாதாள சாக்கடை, சாலை வசதி, தெருவிளக்கு, பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:- கிராம சபை நடத்துவது போல் நகரப்பகுதியில் உள்ள மக்கள் குறைகளை கூறுவதற்காக பகுதி சபா கூட்டம் நடத்தப்படுகிறது. நெல்லை மாநகராட்சி முழுவதும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. நெல்லை மாநகரத்தை தூய்மையான நகரமாக மாற்ற முதல் கட்டமாக 5 வார்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதிரி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்காக மாநகராட்சி பகுதிகளில் உள்ள 40-க்கும் மேற்பட்ட நீர் நிலைகளை கண்டறிந்து அவற்றை மேம்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
மாநகர பகுதிகளில் உள்ள பாளையங்கால்வாய், கோடகன் கால்வாய், நெல்லை கால்வாய் ஆகியவை தூர்வாரப்பட்டு குடியிருப்புகளில் இருந்து குப்பைகளை கால்வாயில் கொட்டாத வண்ணம் கம்பி வேலிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநகர பகுதிகளில் பெண்களின் பாதுகாப்புக்காக அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாநகர பகுதியில் வார்டு மக்களின் குறைகளை நேரடியாக ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மேலப்பாளையம் உதவி ஆணையாளர் ஜஹாங்கீர் பாட்ஷா, மாவட்ட வழங்கல் அலுவலர் வள்ளிக்கண்ணு, சமூக நல அலுவலர் தனலட்சுமி, பாளையங்கோட்டை தாசில்தார் ஆனந்தபிரகாஷ், மாநகர தி.மு.க. துணைச்செயலாளர் மூளிகுளம் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.