குடியாத்தம் ஒன்றியத்தில் மழை பாதிப்புகளை தடுக்க ஏற்பாடுகள் தீவிரம்
குடியாத்தம் ஒன்றியத்தில் மழை பாதிப்புகளை தடுக்க தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 500 மணல் மூட்டைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
குடியாத்தம் ஒன்றியத்தில் மழை பாதிப்புகளை தடுக்க தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 500 மணல் மூட்டைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
500 மணல் மூட்டைகள்
மாண்டஸ் புயல் எதிரொலியாக குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் மழை பாதிப்பு, இயற்கை பேரிடரை எதிர்கொள்ளும் வகையில் மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் எந்திரம் மற்றும் பொக்லைன் எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோர் உத்தரவிட்டனர்.
அதன்பேரில் குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 500 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஆயிரம் மணல் மூட்டைகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தயார்நிலை
இந்த பணிகளை குடியாத்தம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், உதவி திட்ட இயக்குனர் டி.வசுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், எஸ்.சாந்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மழை நேரங்களில் மரங்கள் விழுந்தால் அதை அகற்றுவதற்கு தேவையான கருவிகள், கயிறுகள், லைட்டுகள் உள்ளிட்டவைகளும், பொக்லைன் எந்திரங்களின் உரிமையாளர்களின் தொலைபேசி எண்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மழை வெள்ளம் மற்றும் இடர்பாடுகளின் போது உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஊரக வளர்ச்சித்துறையினர் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் இரவு தங்கி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 50 ஊராட்சிகளில் பாதிக்கப்படும் பொதுமக்களை பள்ளி மற்றும் முகாம்களில் தங்க வைக்கவும், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதி செய்யவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.