திட்டமிட்டு சாகுபடி செய்தால் இழப்பை தவிர்க்கலாம்
திட்டமிட்டு சாகுபடி செய்தால் இழப்பை தவிர்க்கலாம்
போடிப்பட்டி
திட்டமிட்டு சாகுபடி செய்தால் இழப்பை தவிர்க்கலாம் என்று மடத்துக்குளம் விவசாயி ஒருவர் வழிகாட்டியுள்ளார்.
விலை சரிவு
உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு தென்னை சாகுபடிக்கு அடுத்தபடியாக காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் அடிக்கடி ஏற்படும் விலை சரிவால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உள்ளது. குறிப்பாக தக்காளி சாகுபடியில் இழப்பை சந்திக்கும் விவசாயிகள் தக்காளி பழங்களை ரோட்டோரத்தில் கொட்டி விட்டு செல்லுதல், செடிகளை டிராக்டர் விட்டு உழுது அழித்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் அவல நிலை உள்ளது. ஆனால் விவசாயிகளிடம் சரியான திட்டமிடுதல் இருந்தால் இழப்பைத் தவிர்ப்பதுடன் கணிசமான லாபம் ஈட்டவும் முடியும் என்று மடத்துக்குளம் விவசாயி ஒருவர் வழிகாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
உற்பத்தி அதிகரிக்கும் போது விலை குறைவு ஏற்படுவது என்பது இயல்பான விஷயமாகும். அதேநேரத்தில் அதிக உற்பத்திக்கான காலகட்டங்கள் குறித்து விவசாயிகள் அறிந்திருக்க வேண்டும். உதாரணமாக தக்காளியை எடுத்துக்கொண்டால் உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யக் கூடிய பயிராக உள்ளது. ஆனால் மழைக்காலம் தவிர்த்து மற்ற பருவங்களில் வரத்து அதிகரித்து விலை குறைகிறது.
நிலப்போர்வை
மழைக்காலங்களில் விளைநிலங்களில் மழைநீர் தேங்குவதால் செடிகள் மற்றும் பழங்கள் அழுகி மகசூல் குறைகிறது. இதுவே வரத்து குறைந்து விலை உயர காரணமாகிறது. அந்த வகையில் இனி வரும் சில மாதங்கள் மழைக்காலமாகவே இருக்கும் என்பதால் தக்காளிக்கு நல்ல விலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே சேதமில்லாமல் முழுமையாக மகசூல் ஈட்டும் வகையிலான திட்டமிடுதல் மூலம் அதிக வருவாய் ஈட்ட முடியும். குச்சிகள் நட்டு தக்காளி செடிகளை கீழே படர விடாமல் கொடி போல படர விட்டு சாகுபடி செய்யலாம். இதன் மூலம் மழைக்கால சேதங்களை முழுமையாகத் தவிர்த்து நல்ல மகசூல் ஈட்டலாம். இதுதவிர தற்போது எங்கள் நிலத்தில் நிலப்போர்வை அமைத்து சொட்டுநீர்ப்பாசனத்தில் தக்காளி சாகுபடி செய்துள்ளோம்.
இதனால் களைகள் கட்டுப்படுத்தப்படுவதால் பயிர்களுக்கு கொடுக்கப்படும் ஊட்டங்கள் முழுமையாக பயிர்களை சென்றடைகிறது. மேலும் மேட்டுப்பாத்தி அமைத்து அதன்மீது நிலப்போர்வை அமைக்கப்பட்டுள்ளதால் தக்காளி செடிகள் நிலத்தில் படுவது பெருமளவு தவிர்க்கப்படுகிறது. இது கூடுதல் மகசூலுக்கு உதவுகிறது. மேலும் தற்போது சாகுபடி செய்துள்ள தக்காளி செடிகள் அடைமழைக் காலத்தில் அறுவடைக்கு வரும். அப்போது நிச்சயமாக நல்ல விலை கிடைக்கும். இதுபோல ஒவ்வொரு பயிருக்குமான சீசனை கருத்தில் கொண்டு திட்டமிட்டு சாகுபடி செய்தால் விவசாயம் நிச்சயமாக லாபகரமானதாகவே இருக்கும். இதற்கான வழிகாட்டல்களை வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையினர் வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயி கூறினார்.
---
2 காலம்
மடத்துக்குளம் பகுதியில் நிலப்போர்வை அமைத்து சாகுபடி செய்யப்பட்டுள்ள தக்காளி செடிகளை படத்தில் காணலாம்.