ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாளை மறுநாள் வருகை - மதுரை விமான நிலையம்-மீனாட்சி அம்மன் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்- சிறப்பு அதிகாரிகள் ஆய்வு


ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாளை மறுநாள் வருகை - மதுரை விமான நிலையம்-மீனாட்சி அம்மன் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்-  சிறப்பு அதிகாரிகள் ஆய்வு
x

ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை மறுநாள் (சனிக்கிழமை) மதுரை வர இருப்பதால், விமான நிலையம், மீனாட்சி அம்மன் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனை சிறப்பு அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

மதுரை


ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை மறுநாள் (சனிக்கிழமை) மதுரை வர இருப்பதால், விமான நிலையம், மீனாட்சி அம்மன் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனை சிறப்பு அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

மதுரைக்கு ஜனாதிபதி வருகை

ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவி ஏற்றபின்பு, முதன்முறையாக 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகிறார். நாளை மறுநாள் (18-ந் தேதி) டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, பகல் 11.40 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார்.

அங்கிருந்து காரில் புறப்பட்டு, பகல் 12.15 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கிறார். பின்னர் மீண்டும் விமான நிலையம் ெசன்று, மதுரையில் இருந்து கோவைக்கு செல்கிறார். அங்கு ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி கலந்து கொள்கிறார்.

5 அடுக்கு பாதுகாப்பு

மீனாட்சி அம்மன் கோவிலில் சுமார் ஒரு மணி நேரம் இருக்கும் அவர் அனைத்து சன்னதிக்கும் சென்று தரிசனம் செய்கிறார்.

ஜனாதிபதி வருகையையொட்டி கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. விமான நிலையம் மற்றும் அங்கிருந்து கோவிலுக்கு வரும் வழிகள், கோவிலுக்கு உள்ளே, வெளியே மற்றும் சித்திரை வீதிகள், வெளி வீதிகள் என அனைத்து பகுதியில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. உள்ளூர் மட்டுமில்லாமல் வெளிமாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், உதவி சூப்பிரண்டுகள் என சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள்

ஜனாதிபதி வருகையையொட்டி, சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகளான போலீஸ் சூப்பிரண்டுகள் சுவாமிநாதன், துரைப்பாண்டி, ராதாகிருஷ்ணன் தலைமையில் மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதுெதாடர்பான ஆலோசனை கூட்டம் பழைய கல்யாண மண்டபத்தில் நடந்தது. மதுரை கலெக்டர் அனீஸ்சேகர், போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர், துணை கமிஷனர்கள் சாய்பிரனீத், அரவிந்த், சென்னை இந்துசமய அறநிலையத்துறை கமிஷனர் முரளிதரன், மதுரை மண்டல இணை கமிஷனர் செல்லத்துரை, கோவில் துணை கமிஷனர் அருணாசலம் மற்றும் பொதுப்பணித்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள், கோவில் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கோவில் சார்பில் ஜனாதிபதிக்கு பூரணகும்ப மரியாதை அளிப்பது, மாலை வழங்குவது குறித்து தெரிவிக்கப்பட்டது. இதுதவிர அவர் செல்லும் வழிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாரிடம் கேட்டறியப்பட்டது. கோவிலுக்கு வெளியே ஜனாதிபதிக்காக அமைக்கப்படும் கிரீன் ரூம் (பசுமை அறை) குறித்து பொதுப்பணித்துறையினர் விளக்கம் அளித்தனர்.

கோவிலுக்குள் ஆய்வு

அதை தொடர்ந்து சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் கோவிலுக்குள் சென்று ஆய்வு செய்தனர். ஜனாதிபதி ஒய்வு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தால் அதற்கு கோவில் உள்ளே செவந்தி ஈசுவரர் சன்னதியில் உள்ள தக்கார் அறை ஆய்வு செய்யப்பட்டது. மேலும் அங்கு கோவில் சார்பில் அன்னதான பிரசாதம் வழங்குவது குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி செல்லும் வழிகளில் தேவையற்ற மின்வயர்கள், பொருட்களை அகற்றுமாறு சிறப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். வருகிற 18-ந் தேதி பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்கும் நேரம், கோவிலை சுற்றியுள்ள கடைகள் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர். சுமார் 2 மணி நேரம் ஆய்வு செய்த பின்னர், அங்கிருந்து புறப்பட்டனர்.

விமான நிலையத்திலும் ஆலோசனை

முன்னதாக ஜனாதிபதி வருகையையொட்டி, மதுரை விமான நிலையத்தில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மதுரை விமான நிலைய இயக்குனர் (பொறுப்பு) கணேசன் தலைமையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விசுவநாதன், மதுரை மாநகர் துணை கமிஷனர் சாய் பிரனீத், போலீஸ் சூப்பிரண்டு சிவ பிரசாத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதுபோல், டெல்லியில் இருந்து வந்திருந்த ஜனாதிபதியின் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.

சுமார் 1 மணி நேரம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை விமான நிலையத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து சீரமைப்பு, அடையாள அட்டை, கொரோனா பரிசோதனை உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், வருவாயத்துறை சார்பில் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் கோட்டைச்சாமி, சுகாதார துறை சார்பில் மதுரை மாவட்ட துணை இயக்குனர் அர்ஜூன்குமார், மருத்துவ அலுவலர் தனசேகரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி மற்றும் விமான நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். நாளை மறுநாள் பாதுகாப்பு பணியில் இருக்கும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை 72 மணி நேரத்திற்கு முன்பு செய்யப்பட வேண்டியது இருப்பதால், அது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, அந்த பணியாளர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து இன்று மதியம் கொரோனா பரிசோதனை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story