2 வயது சிறுமி குளத்தில் பிணமாக மீட்பு


தினத்தந்தி 14 Oct 2022 12:15 AM IST (Updated: 14 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கருங்கல் அருகே வீட்டின் முன் விளையாடிய 2 வயது சிறுமி குளத்தில் பிணமாக மீட்கப்பட்டது.

கன்னியாகுமரி

கருங்கல்:

கருங்கல் அருகே வீட்டின் முன் விளையாடிய 2 வயது சிறுமி குளத்தில் பிணமாக மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

கப்பலில் வேலை

கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப். கப்பலில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீஜா. இவர்களுக்கு 2 மகன்களும், மிஸ்ரிதா பிரிதுயூஷி என்ற 2 வயது மகளும் இருந்தனர். பிரதீப் அண்மையில் விடுமுறையில் ஊருக்கு வந்து தனது மகளுக்கு காதுகுத்தி பிறந்தநாள் கொண்டாடிவிட்டு மீண்டும் வேலைக்கு சென்றிருந்தார்.

இந்தநிலையில் நேற்று காலையில் மகன்கள் இருவரும் பள்ளிக்கு சென்றனர். காலை 10 மணியளவில் தாய் ஸ்ரீஜாவும், சிறுமி மிஸ்ரிதா பிரிதுயூஷியும் வீட்டின் அருகே உள்ள சப்போட்டா மரத்தில் பழம் பறிக்க சென்றனர். பின்னர் ஸ்ரீஜா துணிகளை காய போடுவதற்காக மொட்டை மாடிக்கு சென்றார். சிறுமி மிஸ்ரிதா பிரிதுயூஷி வீட்டின் முன்பு முற்றத்தில் விளையாடி கொண்டிருந்தாள்.

சிறுமியை காணவில்லை

தயார் திரும்பி வந்து பார்த்த போது சிறுமியை காணவில்லை. இதனால் பதறிபோன தாயார் அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுமியின் கழுத்திலும், கைகளிலும் தங்க நகைகள் அணியப்பட்டிருந்தது. இதனால் நகைக்காக யாராவது சிறுமியை கடத்தி சென்றிருக்கலாம் என கருதப்பட்டது.

இதுகுறித்து கருங்கல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது வீட்டின் முன்பக்கம் சாலையின் மறுபுறம் ஒரு குளம் இருப்பதை கண்டனர். சிறுமி குளத்தில் தவறி விழுந்திருக்கலாம் என கருதிய போலீசார் குளச்சல் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

பிணமாக மீட்பு

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குளத்தில் இறங்கி தேடினர். அப்போது சிறுமி மிஸ்ரிதா பிரிதுயூஷி குளத்தில் இருந்து பிணமாக மீட்கப்பட்டாள். சிறுமி அணிந்திருந்த நகைகள் அனைத்தும் அப்படியே கிடந்தன.

இதனால் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுமி திறந்து கிடந்த கேட் வழியாக வெளியே வந்து சாலைைய கடந்து குளத்தில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இதையடுத்து உடலை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியின் சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீட்டின் முற்றத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுமி குளத்தில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story