முருங்கை வியாபாரி போல நடித்து மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு
கள்ளிமந்தையம் அருகே முருங்கை வியாபாரி போல நடித்து மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மாடு மேய்த்த மூதாட்டி
ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தையம் அருகே உள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் உத்தமி (வயது 72). இவர், அப்பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று காலை இவர், தனது தோட்டத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில், சுமார் 35 வயது மற்றும் 45 வயது மதிக்கத்தக்க 2 பேர் அங்கு வந்தனர். இதில் ஒருவர் காவி நிறத்தில் வேட்டியும், மற்றொருவர் கைலியும் அணிந்திருந்தார். மோட்டாா் சைக்கிளில் இருந்து இறங்கிய 2 பேரும், உத்தமியிடம் நைசாக பேச்சு கொடுத்தனர்.
தங்க சங்கிலி பறிப்பு
தங்களை முருங்கை வியாபாரிகள் என்று அவர்கள் உத்தமியிடம் அறிமுகப்படுத்தி கொண்டனர். மேலும் அப்பகுதியில் முருங்கைக்காய்களை வாங்குவதற்கு வந்திருப்பதாக தெரிவித்தனர். இதனை நம்பிய உத்தமி, அவர்களிடம் பேசி கொண்டிருந்தார்.
அப்போது அவர்கள் தங்களுக்கு தாகமாக இருப்பதாகவும், தண்ணீர் தருமாறும் உத்தமியிடம் கேட்டனர். இதனையடுத்து அருகே உள்ள வீட்டுக்குள் சென்று, உத்தமி தண்ணீர் கொண்டு வந்தார். அந்த சமயத்தில் அவர்கள் 2 பேரும், உத்தமியின் கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்தனர். பின்னர் அவர்கள், தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளிலேயே மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.
கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீஸ் நிலையத்தில் உத்தமி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்தார். மேலும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.
இதேபோல் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நேற்று காலை முதல் மர்ம நபர்கள் 2 பேரும் அப்பகுதியில் பலமுறை மோட்டார் சைக்கிளில் சுற்றிதிரிந்த காட்சி பதிவாகி உள்ளது.
அதனை துருப்புச்சீட்டாக கொண்டு மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தோட்டத்தில் தனியாக இருந்த மூதாட்டியிடம், தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.