வரத்து குறைந்ததால் விைல உயர்வு: 100 வாழை இலை கட்டு ஒன்று ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை
பொள்ளாச்சி மார்க்கெட்டில் வரத்து குறைந்ததால் 100 வாழை இலை கட்டு ஒன்று ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி மார்க்கெட்டில் வரத்து குறைந்ததால் 100 வாழை இலை கட்டு ஒன்று ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.
வாழை இலை
பொள்ளாச்சி மார்க்கெட்டிற்கு வாழை இலைகள் அதிகபட்சமாக ஆனைமலை, நெகமம், வடக்கிபாளையம், ராம பட்டிணம், கோபாலபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இதனை உள்ளூர் மற்றும் கேரள வியாபாரிகள் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து ஏலம் கேட்டு வாங்கி செல்கின்றனர். திருமணம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் வாழை இலை விலை அதிகமாக காணப்படும். தற்போது கிராம பகுதிகளில் கடுமையான வெயில் வாட்டி எடுப்பதால் பல இடங்களில் வாழை மரம் வாடி வதங்கி காணப்படுகிறது. இதன் காரணமாக வாழை இலை உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது.
கடும் கிராக்கி
கடந்த சில வாரமாக பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும் வாழை இலை குறைவாக உள்ளதால் வாழை இலைக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
வாரந்தோறும் 250- க்கு மேற்பட்ட வாழை இலை கட்டுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் தற்போது பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனி, வெயில் அடித்து வருவதால் நேற்று நடைபெற்ற விற்பனைக்கு 75 வாழை கட்டுகள் மட்டுமே வந்தது 100 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு வாழை இலை 1,800 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை ஏலம் போனது.
வாழை இலை கட்டுகளை உள்ளூர் மற்றும் கேரளா வியாபாரிகள் ஏலம் எடுத்துச் சென்றனர்.