பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் ஆதாருடன் செல்போன் எண்ணை தபால் நிலையங்களில் இணைக்கலாம் - கடலூர் கோட்ட அதிகாரி தகவல்
பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் இ-கே.ஒய்.சி. செய்ய ஆதாருடன் செல்போன் எண்ணை தபால் நிலையங்களில் இணைக்கலாம் என்று கடலூர் கோட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கடலூர் தபால் அலுவலகங்களில் கோட்ட கண்காணிப்பாளர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செல்போன் எண்ணை இணைக்கலாம்
மத்திய அரசின் 'பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி' திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், பி.எம். கிஷான் இணையதளத்தில் அல்லது செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி. அங்கீகாரத்தை பயன்படுத்தி இ-கே.ஒய்.சி. செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் தங்களின் ஆதாருடன் செல்போன் எண்ணை இணைப்பது அவசியம். ஆகவே விவசாயிகள் தங்களது அருகில் உள்ள தபால் நிலையங்கள், தபால்காரர், கிராம தபால் ஊழியரை அணுகி ஆதாருடன் செல்போன் எண்ணை இணைத்து பயன்பெறலாம்.
தபால் அலுவலர் மற்றும் கிராம தபால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் ஆதாரில் செல்போன் எண்ணை இணைத்து கொள்ளலாம். இந்த சேவைக்கு ரூ.50 கட்டணமாக பெறப்படுகிறது.
சிறப்பு முகாம்
ஆதாருடன் செல்போன் எண்ணை இணைத்த பிறகு, https://pmkisan.gov.in/aadharekyc.aspx என்ற பி.எம். கிஷான் இணையதளத்தில் அல்லது பி.எம். கிஷான் செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி. அங்கீகாரத்தை பயன்படுத்தி, இ-கே.ஒய்.சி. செய்து கொள்ளலாம். இதற்காக கடலூர் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறையுடன் இணைந்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தியும் விவசாயிகள் தங்கள் செல்போன் எண்ணை ஆதாருடன் இணைத்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.