காலை உணவு திட்டம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு


காலை உணவு திட்டம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
x

காலை உணவு திட்டம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் தொடக்கப்பள்ளியின் காலை உணவு பொறுப்பாளரிடம் போனில் பேசி உணவு விவரங்களை கேட்டறிந்தார்.

சென்னை,

தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தை கடந்த 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தின் குறிக்கோள்கள், மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்வது; ஊட்டச்சத்து குறைபாடினால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது; ஊட்டச்சத்து நிலையை உயர்த்துவது; பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வருகையை உயர்த்தி தக்க வைப்பது; வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவை ஆகும்.

தமிழகத்தின் மாநகராட்சி, நகராட்சி, ஊரகம் (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் (1 முதல் 5-ம் வகுப்பு வரை) படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் செயல்படுத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆய்வு கூட்டம்

இந்த நிலையில் காலை உணவு திட்டத்தின் ஆய்வு கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம்,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செல்போனில் பேசினார்

இந்த கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி மாதிரி தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம் எப்படி செயல்படுகிறது? காலை உணவு வழங்கப்படும் விவரங்கள் என்ன? என்பது பற்றி அந்த பள்ளியின் காலை உணவு வழங்கும் பொறுப்பாளர் ஆர்.மணிமேகலை மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி ஆகியோரிடம் செல்போன் மூலமாக விசாரித்து அறிந்தார்.

அப்போது அவர் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளித்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "வணக்கம்மா, நான் ஸ்டாலின் பேசுகிறேன், நீங்க மணிமேகலையா? நீங்க எந்த பகுதி பள்ளியை பார்க்கிறீங்க? இன்னைக்கு எத்தனை மாணவர்கள் சாப்பிட்டாங்க? 36 பேரா? சாப்பாடு சரியான நேரத்திற்கு வந்ததா? இடையில் பிரச்சினைகள் இல்லையே, சரியாகத்தானே போகிறது? பசங்க சாப்பிட்டு முடித்துவிட்டார்களா? எதாவது சொல்ல வேண்டியதிருக்கிறதா?, புகார் இருக்கிறதா? சரி, தலைமை ஆசிரியரிடம் கொடுங்கள். நான் ஸ்டாலின் பேசுகிறேன். உங்கள் பெயர் என்ன? சுமதியா? தினமும் 36 பேர்தான் சாப்பிடுவார்களா? இல்லாவிட்டால் எண்ணிக்கை குறைகிறதா? உணவின் தரம் எப்படி உள்ளது? நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்" என்று பேசினார்.


Next Story