"சமூக நீதியின் உண்மையான ஹீரோ பிரதமர் மோடி"-மத்திய மந்திரி எல்.முருகன் பேச்சு


சமூக நீதியின் உண்மையான ஹீரோ பிரதமர் மோடி-மத்திய மந்திரி எல்.முருகன் பேச்சு
x

சமூகநீதியின் உண்மையான ஹீரோ பிரதமர் மோடி என மதுரை பொதுக்கூட்டத்தில் எல்.முருகன் கூறினார்.

மதுரை

மதுரை,

சமூகநீதியின் உண்மையான ஹீரோ பிரதமர் மோடி என மதுரை பொதுக்கூட்டத்தில் எல்.முருகன் கூறினார்.

சாதனை விளக்க பொதுக்கூட்டம்

மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மதுரை மேலூரில் நேற்று நடந்தது. புறநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மகா.சுசீந்திரன் தலைமை தாங்கினார். மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்துகொண்டு, மோடி அரசின் சாதனைகளை விளக்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பிரதமராக மோடி கடந்த 2014-ம் ஆண்டு பதவியேற்றார். அவர் பதவியேற்ற பின்பு நாடு வளர்ச்சி பாதையில் தொடர்ந்து முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. நல்ல நல்ல வளர்ச்சி திட்டங்களை நாட்டு மக்களுக்காக மோடி அர்ப்பணித்துள்ளார். 8 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளால் எல்லா இடத்திலும் ஊழல் அதிகமாகவே இருந்தது. செய்தித்தாள்களை புரட்டினால் தினம் தினம் விவசாயிகள் தற்கொலைகள் பதிவாகி கொண்டே இருந்தது. மோடி ஆட்சியில் விவசாயிகள் அனைவரும் பாதுகாக்கப்பட்டனர். ஏழைகளுக்கு நலத் திட்டங்களை வழங்க வேண்டும் என்பதே மோடி அரசின் தாரக மந்திரம்.

எண்ணற்ற திட்டங்கள்

ஏழை மக்களுக்கு வங்கி கணக்கை அறிமுகம் செய்து வைத்தது மோடி ஆட்சியில் தான். இது மட்டுமின்றி ஏழை மக்களுக்கு இலவச வீடுகள், குடிநீர் வசதி, கழிப்பறை, கியாஸ் இணைப்பு என எண்ணற்ற திட்டங்களை மோடி அரசு செய்துள்ளது.

விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தையும் மோடி கொண்டு வந்தார். அதன் மூலம் தமிழகத்தில் ஆண்டுக்கு 46 லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். டெல்லியில் இருந்து விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு வருடந்தோறும் ரூ.6 ஆயிரம் வந்துவிடுகிறது. நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியிலும் அதிக கவனம் செலுத்தி மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியாவை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கிறார்.

கொரோனா

அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் கூட கொரோனாவால் திணறிய போது இந்தியா அதனை நல்ல முறையில் கையாண்டது. தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் மற்ற நாடுகளுக்கு இந்தியா முன்னோடியாக இருக்கிறது. சென்னையில் மெட்ரோ திட்டம், தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகள், மதுரைக்கு ஸ்மார்ட் சிட்டி என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி வளர்ச்சி திட்டங்களை மோடி செய்து வருகிறார்.

தி.மு.க.- காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்காக பொய்யான வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுள்ளனர். ஆனால் பா.ஜ.க. அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவதாக கூறி மக்களிடம் தி.மு.க. வாக்குகளை பெற்றது. ஆனால் இப்போது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களால் பதில் கூற முடியவில்லை. தி.மு.க.வினர் திராவிட மாடல் என்று கூறி வருவது யாருக்கும் புரியவில்லை. இது ஆன்மிக பூமி. திராவிட மாடல் இங்கு எடுபடாது. சமூகநீதிக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் சம்பந்தம் கிடையாது. சமூக நீதி பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் கிடையாது. பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் முதல்-அமைச்சருக்கு அடுத்த நிலையில் உள்ள இலாக்காக்கள், பட்டியல் இனத்தவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் பட்டியல் இனத்தவருக்கு பின்தங்கிய இலாகா வழங்கப்பட்டுள்ளது. இதுவா சமூக நீதி. உண்மையான சமூக நீதியின் ஹீரோ பிரதமர் மோடிதான். மோடியின் ஆட்சியில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம், பேராசிரியர் சீனிவாசன், மாநில செயலாளர் சரவணன், மாவட்ட பொதுச் செயலாளர் சந்தோஷ் சுப்பிரமணியம், மாவட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கப் பெருமாள், மாவட்ட நிர்வாகிகள் ஆனந்த், ஜெயராம், ரஞ்சித், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட மாவட்ட மண்டல கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story