காரில் பயணித்த பிரதமர் மோடி


காரில் பயணித்த பிரதமர் மோடி
x

திண்டுக்கல்லில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி காரில் பயணித்தார்.

மதுரை

திண்டுக்கல்லில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி காரில் பயணித்தார்.

மதுரைக்கு காரில் பயணம்

திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம பல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அங்கு நிகழ்ச்சியை முடித்து கொண்டு வானிலை காரணமாக ஹெலிகாப்டருக்கு பதிலாக பிரதமர் மோடி கார் மூலம் மதுரை விமான நிலையம் புறப்பட்டார்.

இதையடுத்து திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களின் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு சுமார் 65 கிலோ மீட்டர் தூர பயணம் ஆகும்.

39 நிமிடத்தில் வந்தடைந்தார்

எனவே விழா நடந்த இடத்தில் இருந்து முதலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோர் கார்களில் மதுரை புறப்பட்டனர்.

சற்று நேரம் கழித்து பிரதமர் மோடியின் கார் மதுரை விமானநிலையம் நோக்கி புறப்பட்டது. திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் கொடைரோடு, வாடிப்பட்டி, நகரி, சமயநல்லூர், நாகமலைபுதுக்கோட்டை, கப்பலூர் வழியாக மதுரை விமான நிலையத்திற்கு 39 நிமிடத்தில் பிரதமரின் கார் வந்தடைந்தது. கப்பலூர் உள்ளிட்ட சில இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக நின்று ைகயசைத்து பிரதமரை வரவேற்றனர்.

முன்னதாக, முன்னாள் முதல்- அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமரை வழி அனுப்பி வைப்பதற்காக அவர்கள் தங்கி இருந்த ஓட்டல்களில் இருந்து புறப்பட்டு மாலை 5.30 மணியளவில் மீண்டும் மதுரை விமான நிலையம் வந்தனர்.

வழியனுப்பி வைத்தனர்

மாலை 6.25 மணியளவில், தனி விமானம் மூலம் பிரதமர் மோடி மதுரையில் இருந்து புறப்பட்டு, விசாகப்பட்டினம் சென்றார். அவரை வழி அனுப்பிய பின்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, முன்னாள் முதல்-அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அதிகாரிகள், பிரமுகர்கள் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டனர்.

ஒரே சமயத்தில் பிரதமர், முதல்- அமைச்சர், கவர்னர் மற்றும் முக்கிய தலைவர்கள் வருகையால் மதுரை விமான நிலையம் ேநற்று முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story