முதல்-அமைச்சர் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்துவதா? எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் கண்டனம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்தும் வகையில் அவதூறுகளை வைத்து அரசியல் செய்யவேண்டாம் என எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
'முதலீட்டை ஈர்க்கப் போகிறாரா? அல்லது முதலீடு செய்யப் போகிறாரா?' என்று தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ள 9 நாள் வெளிநாட்டுப் பயணத்தை கொச்சைப்படுத்தியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்-அமைச்சர் வெளிநாடுகளுக்கு முதலீடு பெறப்போகிறார், என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கு முதல் நாள் ஒரு பேரணியை நடத்தி, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு என புகார் கொடுக்கிறார்.
பொள்ளாச்சியில் இளம்பெண்கள் கதறியபோது கண்ணை மூடிக்கொண்டு இருந்துவிட்டு, அமைதியாக அறவழியில் போராடிய ஸ்டெர்லைட் போராட்டக் குழுவினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை சுட்டுத்தள்ளிவிட்டு, நான் டி.வி.யில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று பொய் சொன்னவர் எடப்பாடி பழனிசாமி. தனது துறையின்கீழ் பணியாற்றும் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீதான பாலியல் புகார்களையே வேடிக்கை பார்த்தவர் என்பதுதான் வரலாறு.
அவதூறுகளை முதலீடாக வைத்து...
முதலீடு என்றால் தனக்குக் கிடைக்கும் ஊழல் பணம் மட்டுமே என அகராதியில் புதிய அர்த்தம் கண்டுபிடித்த எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளை பெறப் போகும் முதல்-அமைச்சர் மீது அவதூறு பேசுகிறார். அந்த அளவிற்கு அவருக்கு பொறாமையும், எரிச்சலும் மனதிற்குள் கோடை வெயிலை விட அனலாக கக்குகிறது
அ.தி.மு.க.வின் அமைச்சரவையையே ஒவ்வொருவராக வெளிநாடுகளுக்கு அனுப்பி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கிறேன் என்று கபட நாடகம் நடத்திச் சுற்றுலா சென்றது ஊழல் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்குத்தானா? இப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளிநாடு சென்றுள்ளது பற்றி அவதூறு பரப்பும் எடப்பாடி பழனிசாமி, தனது மகனும், அவரது அமைச்சரவை சகாக்களும் ஏன் சென்றார்கள் என்பதை விளக்குவாரா? கொடநாடு கொலை மற்றும் அங்கு நடைபெற்றதாக கூறப்பட்ட தற்கொலைக்கு அடையாளமாக இருந்த மரத்தை வெட்டி சாட்சியங்களை மறைத்தது போன்ற மர்மங்கள் விலகும்போது எடப்பாடி பழனிசாமியின் உண்மை முகம் தெரியவரும் என்பதில் சந்தேகமில்லை.
அதுவரை அவதூறுகளை முதலீடுகளாக வைத்து அரசியல் செய்யாமல் இருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு நல்லது. 2015-ம் ஆண்டும் அ.தி.மு.க. ஆட்சியில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு அ.தி.மு.க. மாநாடு. எடப்பாடி பழனிசாமி இருந்தபோது நடத்திய 2019-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு எடுபடாத மாநாடு.
நிம்மதியாக இருக்க முடியாது
முதல்-அமைச்சர் பொறுப்பைத் தக்கவைக்கப் பணம், ஓ.பி.எஸ். தகராறில் பொதுக்குழுவைக் கூட்டப் பணம், அதில் 'மெஜாரிட்டி' உறுப்பினர்களை பெற பணம், வேண்டிய தீர்மானத்தை நிறைவேற்ற பணம், எல்லாவற்றையும் விட, பொதுச் செயலாளர் பதவியைப் பெற பணம் என கட்சி அரசியலையும், அசிங்கமாக அவர் ஆட்சியில் விட்ட காண்டிராக்ட் ஊழல் அரசியல் போல் நடத்திப் பதவியைப் பெற்று, பவனி வந்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க.வை, திராவிட மாடல் முதல்-அமைச்சரைப் பற்றி குறை கூற தகுதியும் இல்லை. தார்மீக உரிமையும் இல்லை. தங்கள் ஆட்சி ஊழலை மறைக்க இதுபோன்ற அவதூறு பரப்பும் வேலைகளில் ஈடுபட வேண்டாம். எடப்பாடி பழனிசாமி பாணியிலேயே நாங்கள் பேசத் தொடங்கினால், ஒரு நாள் கூட அவர் நிம்மதியாக இருக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.