முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்: ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ் நியமனம்
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ்., நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ்., நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அரசாணையில், "முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் - அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் ஊட்டச் சத்து மிக்க காலை உணவு வழங்குவதற்கான முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் - திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம் செய்தல் தொடர்பாக ஆணை வெளியிடப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச் சத்து குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி எண்.110-ன் கீழ் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு தொடக்கப் பள்ளி மாணவ மாணவியருக்கு முதற்கட்டமாக அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் காலை வேளைகளில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று வெளியிடப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் ஏனையவற்றுக்கிடையே தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப் பகுதிகளில் செயல்படும் 1545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 தொடக்கப்பள்ளி (1 முதல் 5 வகுப்பு வரை) குழந்தைகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை 2022-2023 ஆம் ஆண்டில் முதற்கட்டமாக செயல்படுத்திட ஆணை வெளியிடப்பட்டது.
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை திறம்பட செயல்படுத்திட ஏதுவாக இல்லம் தேடிக் கல்வி சிறப்பு அலுவலர், திரு.க. இளம்பகவத், இ.ஆ.ப, முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின், திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக நியமித்து தக்க ஆணைகள் வழங்கிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.