பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் ஆய்வு
முதுமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் ஆய்வு நடத்தினர்.
கூடலூர்
முதுமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் ஆய்வு நடத்தினர்.
முதுமலைக்கு பிரதமர் வருகை
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வருகிற 9-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். அங்கு யானைகள் பராமரிக்கும் முறைகள், அதற்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிகிறார். பின்னர் பாகன்களிடம் கலந்துரையாடி வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு வழங்குகிறார்.
தொடர்ந்து ஆஸ்கார் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவண படத்தில் நடித்த பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி ஆகியோரை சந்தித்து பாராட்டி பொன்னாடை போர்த்தி கவுரவிக்கிறார். மேலும் படத்தில் இடம் பெற்ற ரகு, பொம்மி குட்டி யானைகளை பார்வையிடுகிறார். பின்னர் முதுமலை வனத்தில் புலிகளின் பாதுகாப்பு மற்றும் எண்ணிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிகிறார்.
பாதுகாப்பு குழுவினர் ஆய்வு
இதையடுத்து அங்கிருந்து மசினகுடி இறங்கு தரைத்தளத்தில் தயார் நிலையில் வைக்கப்படும் ஹெலிகாப்டர் மூலமாக மைசூரு செல்ல உள்ளார். இதைத்தொடர்ந்து முதுமலையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழு ஆய்வு நடத்தியது. அவர்கள், மசினகுடியில் உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தை ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம், மாயாறு கரையோரம், ஆதிவாசி கிராமங்கள், சாலை மார்க்கமாக பிரதமர் வந்து செல்லும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், முதுமலை புலிகள் காப்பக கள துணை இயக்குனர் வித்யா மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பக வன அதிகாரிகள், கர்நாடகா காவல்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
பிரதமர் வருகைையயொட்டி முதுமலையில் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் டி.ஐ.ஜி. விஜயகுமார் மேற்பார்வையில் 7 போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இது தவிர முதுமலை வனப்பகுதி என்பதால், அதிவிரைவுப்படை போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.