பரமக்குடி கோர்ட்டில் இருந்து கைதி ஓட்டம்
பரமக்குடி கோர்ட்டில் இருந்து கைதி தப்பி ஓடினார்.
பரமக்குடி,
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கீழப்பெருங்கரை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் கார்த்திக் ராஜா (வயது 28) இவர் மானாமதுரையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். மானாமதுரை பகுதியில் இவர் ரெயில்வே தண்டவாளத்தில் உள்ள இரும்பு பொருட்களை திருடி விற்றுள்ளார். இது குறித்து மானாமதுரை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் ராஜாவை கைது செய்தனர். பின்பு அவரை பரமக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக நேற்று மாலை அழைத்து வந்தனர்.
ரெயில்வே போலீசார், நீதிபதியிடம் ஆவணங்களை சமர்ப்பித்து கொண்டிருந்தபோது அங்கிருந்த கைதி கார்த்திக் ராஜா திடீரென தப்பி ஓடி விட்டார். அதை அறிந்த போலீசார் விரட்டியும் அவரை பிடிக்க முடியவில்லை. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பரமக்குடி கோர்ட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. கார்த்திக்ராஜாவை போலீசார், தீவிரமாக தேடிவருகிறார்கள்.