உதயேந்திரத்தை சேர்ந்த சிறை கைதி தப்பியோட்டம்


உதயேந்திரத்தை சேர்ந்த சிறை கைதி தப்பியோட்டம்
x

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உதயேந்திரத்தை சேர்ந்த சிறை கைதி தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர்

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உதயேந்திரத்தை சேர்ந்த சிறை கைதி தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போக்சோ கைதி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 44), தொழிலாளி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு பாலியல் பலாத்கார வழக்கில் வாணியம்பாடி போலீசாரால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ராஜாவுக்கு சீராக மூச்சுவிடுவதில் பிரச்சினை காணப்பட்டது. இதற்காக அவர் ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையே கடந்த 13-ந் தேதி அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையொட்டி ராஜா சிகிச்சை பெற்று வந்த அறையின் முன்பாக ஜெயில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

தப்பியோட்டம்

இந்த நிலையில் ராஜா கழிவறைக்கு சென்று வருவதாக போலீசாரிடம் கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் அறைக்கு திரும்பி வரவில்லை. அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கழிவறைக்கு சென்று பார்த்தனர். அங்கு அவர் இல்லை. அதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக மருத்துவமனை வளாகம் மற்றும் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் தேடிப்பார்த்தனர்.

ஆனால் ராஜாவை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் அங்கிருந்து தப்பியோடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இதுகுறித்து ஜெயில், போலீஸ் உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

கண்ணமங்கலம் கூட்ரோடு

இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய ராஜா அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் செல்லும் பஸ்சில் ஏறியதும், டிக்கெட் எடுக்க பணம் இல்லாததால் கண்ணமங்கலம் கூட்ரோட்டில் பஸ் கண்டக்டர் அவரை இறக்கி விட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து வேலூர் சரகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு ராஜாவின் புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வாகன சோதனை, ரோந்து பணியின் போது அவரை பார்த்தால் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போக்சோ கைதி தப்பியோடிய சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story