சேலம் சிறையில் கைதிக்கு கொரோனா


சேலம் சிறையில் கைதிக்கு கொரோனா
x

சேலத்தில் லாட்டரி சீட்டு விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கைதிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சேலம்

சேலத்தில் லாட்டரி சீட்டு விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கைதிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

லாட்டரி வியாபாரி

சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக 47 வயதான ஆண் ஒருவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதன் முடிவு வருவதற்கு முன்பாக அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவரை கோர்ட்டு உத்தரவின் பேரில் சேலம் சிறையில் போலீசார் அடைத்தனர்.

கொரோனா பாதிப்பு

இந்நிலையில், சிறையில் உள்ள அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

லாட்டரி சீட்டு விற்பனை செய்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதால் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் சிறையில் அவருடன் இருந்த கைதிகளும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

27 ஆக அதிகரிப்பு

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் சேலம் மாநகரில் 2 பேருக்கும், புறநகரில் ஒருவருக்கும் நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 6 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 21 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களை மருத்துவத்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.


Next Story