திண்டிவனத்தில் பரபரப்புபோலீசுக்கு டிமிக்கி கொடுத்து தப்பி ஓடிய கைதி கைதுசினிமாபட பாணியில் போலீசார் துரத்தி பிடித்தனர்


திண்டிவனத்தில் பரபரப்புபோலீசுக்கு டிமிக்கி கொடுத்து தப்பி ஓடிய கைதி கைதுசினிமாபட பாணியில் போலீசார் துரத்தி பிடித்தனர்
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

போலீசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பி ஓடிய கைதியை திண்டிவனம் போலீசார் சினிமா பட பாணியில் துரத்தி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம்


திண்டிவனம்,

புதுவை ரோடியர்பேட் பகுதியை சேர்ந்தவர் சீனி முகமது மகன் அமீர் அப்துல் காதர் (வயது 22). இவர் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கடந்த 26-ந்தேதி புதுச்சேரி பெரியகடை போலீசார், ரெயின்போ நகர் பகுதியில் வைத்து கைது செய்தனர். இவரிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே சிறையில் இருந்த அவருக்கு 27-ந்தேதி திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது, இதையடுத்து அவர் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்தார்.

தப்பி ஓட்டம்

அன்று இரவு, அமீர் அப்துல்காதர், போலீசாரிடம் கழிப்பறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் போலீசார் கழிப்பறைக்கு சென்று பார்த்தனர். அவர் அங்கு இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தேடினர்.

அப்போது தான் அவர் கழிப்பறைக்கு செல்வதாக கூறி 'டிமிக்கி' கொடுத்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதுதொடர்பாக பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் அமீர் அப்துல்காதரை தேடி வந்தனர்.

குளியலறைக்குள் பதுங்கல்

இந்நிலையில் நேற்று காலை, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் திந்திரினீஸ்வரர் கோவில் அருகே ஒரு வீட்டின் வாசலில் ஒருவர் சந்தேகத்துக்கு இடமாக படுத்திருந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், திண்டிவனம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ராஜ், தனிப்பிரிவு காவலர் ஆதி ஆகியோர் அங்கு சென்றனர். அப்போது, அந்த நபர் வீட்டு மாடியில் ஏறி, அருகே அடுத்தடுத்து இருந்த மாடிவீடுகள் மீது தாவி குதித்து தப்பி செல்ல முயன்றார்.

இருப்பினும் போலீசார் விடாமல், சினிமா பட பாணியில் துரத்தி சென்றனர். இறுதியாக, ஒரு வீட்டின் உள்ளே நுழைந்து குளியலறையில் அந்த நபர் தஞ்சமடைந்தார்.

பின்னர் போலீசார், மெதுவாக அருகே சென்று, அந்த அறையின் கதவை வெளிப்புறமாக பூட்டினர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன், கதவை திறந்து அந்த நபரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

கைது

போலீசாரின், விசாரணையில் அமீர் அப்துல் காதர் என்பதும், புதுச்சேரி போலீசாரிடம் இருந்து தப்பி வந்தவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் அமீர் அப்துல் காதர் திண்டிவனம் கிடங்கல், கீரைக்கார தெருவில் 2 மோட்டார் சைக்கிளை திருடியதாவும் போலீசில் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story