தனியார் பஸ்-கார் மோதல்; ஆசிரியை, கணவர் பலி


தனியார் பஸ்-கார் மோதல்; ஆசிரியை, கணவர் பலி
x

விருதுநகரில் தனியார் பஸ், கார் மோதிக்கொண்ட விபத்தில் கணவருடன் ஆசிரியை பலியானார். அவர்களுடைய 2 குழந்தைகளும் காயம் அடைந்தனர்.

விருதுநகர்

விருதுநகரில் தனியார் பஸ், கார் மோதிக்கொண்ட விபத்தில் கணவருடன் ஆசிரியை பலியானார். அவர்களுடைய 2 குழந்தைகளும் காயம் அடைந்தனர்.

சென்னையில் இருந்து வந்தனர்

சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் (வயது 37). இவர் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி நிதாஷா (32), பள்ளிக்கூட ஆசிரியை. இவர்களது குழந்தைகள் ஜெனிதா ஸ்ரீ (9), பிரசன்ன ஆதித்யா (8).

மனோஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனது சொந்த ஊரான தென்காசி மாவட்டம் சுரண்டைக்கு காரில் புறப்பட்டார். காரை அவரே ஓட்டி வந்தார்.

பஸ் மோதியது

நேற்று மதியம் 12 மணி அளவில் மனோஜ் ஓட்டி வந்த கார், விருதுநகர் புறவழிச்சாலையில் எம்.ஜி.ஆர். சாலை சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சாத்தூரில் இருந்து வத்திராயிருப்பு நோக்கி வந்த தனியார் பஸ், விருதுநகர் பழைய பஸ் நிலையத்திற்கு செல்வதற்காக திரும்பிய போது, மனோஜ் குடும்பத்தினர் வந்த கார் மீது திடீரென மோதியது.

இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரை ஓட்டி வந்த மனோஜ் மற்றும் அவரது மனைவி நிதாஷா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காரில் இருந்த அவரது 2 குழந்தைகளும் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் விருதுநகர் பஜார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த குழந்தைகள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கைது

இந்த விபத்து தொடர்பாக சேரன்மாதேவியை சேர்ந்த நிதாஷாவின் தந்தை பரமசிவம், விருதுநகர் பஜார் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, தனியார் பஸ் டிரைவர் இவந்தைக்குளத்தைச் சேர்ந்த ஞானகுருவை (37) கைது செய்தனர். விபத்தில் பெற்றோரை இழந்து 2 குழந்தைகளும் காயத்துடன் துடித்த காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தின.


Related Tags :
Next Story