விழுப்புரத்தில்விபத்து வழக்கில் தனியார் பஸ் டிரைவருக்கு சிறை


விழுப்புரத்தில்விபத்து வழக்கில் தனியார் பஸ் டிரைவருக்கு சிறை
x
தினத்தந்தி 25 Jan 2023 12:15 AM IST (Updated: 25 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் விபத்து வழக்கில் தனியார் பஸ் டிரைவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விழுப்புரம்


விழுப்புரம் விராட்டிக்குப்பம் பகுதியைச்சேர்ந்தவர் குமார் (வயது 40). இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி, விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த தனியார் பஸ், குமார் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவரான விழுப்புரம் அருகே காவணிப்பாக்கத்தை சேர்ந்த அய்யனாரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, குற்றம் சாட்டப்பட்ட அய்யனாருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story