தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை; துக்கம் தாங்காமல் தாய் விஷம் தின்று சாவு
கரூர் அருகே செல்போன் பார்த்து கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்ததால் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் துக்கம் தாங்காமல் அவரது தாய் விஷம் தின்று பரிதாபமாக இறந்தார்.
தனியார் நிறுவன ஊழியர்
கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா வரவணை ஊராட்சி, சுண்டு குழிப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 45). லாரி டிரைவர். இவரது மனைவி சுமதி (44). இந்த தம்பதியின் மகன் செல்வராஜ் (23). இந்தநிலையில் செல்வராஜ் கல்லூரி படிப்பை முடித்து விட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சுண்டு குழிப்பட்டிக்கு வந்துள்ளார். இந்தநிலையில் வீட்டுக்கு வந்ததில் இருந்தே செல்வராஜ் தொடர்ந்து செல்போனை பார்த்து கொண்டே இருந்து வந்துள்ளார். இதனால் அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் மனமுடைந்து காணப்பட்ட செல்வராஜ் நேற்று முன்தினம் மதியம் தனது வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்வராஜை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து செல்வராஜ் உடலை சிந்தாமணிப்பட்டி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாய் சாவு
இதற்கிடையில் சிறிது நேரத்தில் மகன் இறந்த துக்கம் தாங்கமுடியாமல் சுமதி அரளி விதையை (விஷம்) அரைத்து குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட உறவினர்கள் சுமதியை மீட்டு சிகிச்சைக்காக மயிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதுலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சுமதி பரிதாபமாக இறந்தார்.
ஒரே இடத்தில் தகனம்
இதையடுத்து நேற்று காலை கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாய்-மகனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து உறவினர்கள் தாய், மகனின் உடல்களை எடுத்து வந்து, சுண்டுகுழிப்பட்டி சுடுகாட்டில் ஒரே இடத்தில் வைத்து தகனம் செய்தனர்.இந்த சம்பவம் குறித்து சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.