பொன்னேரி அருகே வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி


பொன்னேரி அருகே வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
x

பொன்னேரியை அடுத்த சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மகன் கண் எதிரே தந்தை பலியானார்.

திருவள்ளூர்

வேன் மீது மோதல்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணி எருக்குவாய் கண்டிகை பகுதியில் வசித்து வந்தவர் கோவிந்தராஜன்(வயது 55). இவர் சென்னை மூலக்கடையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது மகன் ஞானமூர்த்தி (18). இவர் சென்னை மூலக்கடையில் உள்ள மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடையில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து சென்னை நோக்கி மோட்டார் சைக்கிளில் கோவிந்தசாமி தனது மகனுடன் சென்று கொண்டு இருந்தார். சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, சாலை ஓரத்தில் பழுதாகி நின்ற வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

போலீசார் விசாரணை

இதில் நிலைத்தடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர். படுகாயம் அடைந்த கோவிந்தசாமி மகன் கண் எதிரே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார்.

இதுபற்றி தகவலறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து கோவிந்தசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த ஞானமூர்த்தியை மீட்டு அருகே உள்ள பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story