கொள்ளையர்களாக மாறிய தனியார் நிறுவன ஊழியர்கள்


கொள்ளையர்களாக மாறிய தனியார் நிறுவன ஊழியர்கள்
x

நாகர்கோவிலில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். பணக்காரராக ஆகும் ஆசையில் தனியார் நிறுவனர் ஊழியர்கள் கொள்ளையர்களாக மாறியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். பணக்காரராக ஆகும் ஆசையில் தனியார் நிறுவனர் ஊழியர்கள் கொள்ளையர்களாக மாறியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

62¾ பவுன் நகை கொள்ளை

நாகர்கோவில் சைமன்நகரை சேர்ந்தவர் சங்கர நாராயணன் (வயது 38). இவர் வெட்டூர்ணிமடத்தில் உள்ள ஸ்கேன் சென்டரில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் 7-ந்தேதி இரவு பணியில் ஈடுபட்டு இருந்தார். அவருடைய மனைவி பிருந்தா தனது குழந்தையுடன் பரசேரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் யாரும் இல்லை. இதை பயன்படுத்தி யாரோ மர்ம நபர்கள் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து 62¾ பவுன் நகை மற்றும் ரூ.90 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கொள்ளை நடந்த வீட்டின் அருகேயுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சந்தேகப்படும் படியாக 2 நபர்கள் வீட்டின் அருகே சுற்றித் திரிந்தது பதிவாகி இருந்தது.

2 பேர் கைது

அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில், சங்கர நாராயணன் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ராமநாதபுரம் மாவட்டம் காக்கூர் பகுதியை சேர்ந்த சாந்தகுமார் (29), விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த சிவகுமார் (25) என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மாலை அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 50 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.

காவலில் எடுக்க முடிவு

இதையடுத்து கைதான 2 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அதாவது சாந்தகுமாரும், சிவக்குமாரும் நெல்லையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். பின்னர் வேலையை விட்டு விட்டு சிறிய திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், பெரிய அளவில் கொள்ளையடித்து பணக்காரர்கள் ஆகி வாழ்கையில் செட்டில் ஆகிவிட வேண்டும் என்று முடிவு செய்து பூட்டி கிடந்த சங்கர நாராயணன் வீட்டை குறி வைத்து இந்த சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே கைதான 2 பேருக்கும் வேறு திருட்டு வழக்கில் தொடர்ப்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே, 2 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Next Story