'ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது தனியார் நிறுவன கூட்டம்' ஜெயக்குமார் கிண்டல்


ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது தனியார் நிறுவன கூட்டம் ஜெயக்குமார் கிண்டல்
x

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது அ.தி.மு.க. போட்டி கூட்டம் அல்ல, அது தனியார் நிறுவன கூட்டம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை,

சொத்துவரி, பால் விலை, விலைவாசி உயர்வை கண்டித்து சென்னை உள்பட 13 மாவட்டங்களில் அ.தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் சென்னையில் 30 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தங்கச்சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இதில் மாநில-மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:-

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

'நீட்' தேர்வு ரத்து, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை, மாதந்தோறும் மின் கணக்கீடு, கல்விக்கடன், நகைக்கடன் ரத்து, 'கியாஸ்' சிலிண்டருக்கு ரூ.100 மானியம், வருடத்தில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை இந்த அரசு நிறைவேற்றவில்லை.

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக சொத்துவரி, பால் விலை, மின் கட்டணம், கழிவுநீர் வரி போன்றவற்றை உயர்த்தி மக்களை துன்புறுத்தலாமா?. மக்களின் சாபத்துக்கு இந்த அரசு ஆளாகி வருகிறது. குறிப்பாக விலைவாசி உயர்வால் மக்கள் கடும் துயரத்துக்கு ஆளாகி வருகிறார்கள். தாலிக்கு தங்கம், மானிய விலை ஸ்கூட்டர், அம்மா உணவகம், அம்மா மினி கிளினிக் போன்ற அ.தி.மு.க. அரசின் திட்டங்களுக்கு மூடுவிழா நடத்துவதிலேயே இந்த அரசு குறிக்கோளாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

போட்டி கூட்டம் அல்ல

அதனைத்தொடர்ந்து ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடப்பது போட்டி கூட்டம் இல்லை. 'ஓ.பி.எஸ். பிரைவேட்' (தனியார் நிறுவனம்) கம்பெனிக்கு நடக்கும் நிர்வாகிகள் கூட்டம்தான் அது. இது கட்சி கூட்டம் அல்ல. ஆட்கள் தேவை என்று விளம்பரம் கொடுத்து நியமித்தார்கள். அவர்களை வைத்து கூட்டம் நடத்துகிறார்கள்.

அ.தி.மு.க.வுக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சம்பந்தமே இல்லை. அவரது செயல்பாடுகள் ஒருபோதும் அரசியலில் எடுபடாது. அவரிடம் உள்ளவர்கள் அ.தி.மு.க.வின் தொண்டர்களே கிடையாது.

'எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கடிதம் கொடுத்தால் சேர்த்துக்கொள்வோம்' என்று பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியிருக்கிறார். அவர் ஏன் இப்படி ஆகிவிட்டார்? என்று தெரியவில்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் தனது பெயரை கெடுத்துக்கொள்ள கூடாது. கூடா நட்பை அவர் தவிர்ப்பது நல்லது.

தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்

தமிழகத்தை பொறுத்தவரையில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிதான் இருக்கிறது. பா.ஜ.க.வுடன் நட்பு தொடருகிறது.

ஆனால் அது கூட்டணியா? என்பது குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு எடுக்க முடியும். பூத் கமிட்டி போட்டிருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலுக்காக தயாராகி கொண்டுதான் இருக்கிறோம்.

மக்கள் கடும் அதிருப்தி

தி.மு.க. ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த எதிர்ப்பு அலை நிச்சயம் எங்களுக்கு சாதகமாக அமையும். ஏனெனில் அ.தி.மு.க. அரசின் நல்ல திட்டங்களை மக்கள் நினைத்து பார்த்து வருகிறார்கள்.

பரந்தூர் விமான நிலையம் திட்டம் அ.தி.மு.க. அரசால் கொண்டு வரப்பட்டதாக தி.மு.க.வினர் விமர்சிக்கிறார்கள். நாங்கள்தான் கொண்டுவந்தோம் என்றால் நிறுத்திவிடலாமே... தி.மு.க.வினர் வீட்டில் உலை கொதிக்கவில்லை என்றாலும் அ.தி.மு.க.வைதான் குற்றம் சொல்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story