தனியார் நிதி நிறுவன ஊழியர் தற்கொலை
தேனியில் தனியார் நிதி நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி கருவேல்நாயக்கன்பட்டி வள்ளுவர் காலனியை சேர்ந்த சுப்பு மகன் மணிமாறன் (வயது 23). இவர், போடியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வாரமாக யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று அவருடைய தாயார் ஒச்சம்மாள் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது வீட்டுக் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்காததால் தனது மூத்த மகன் வினோத்குமாருக்கு தகவல் கொடுத்தார். அவர் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மணிமாறன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். தகவல் அறிந்ததும் தேனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஒச்சம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.