வைகை அணையில் படகு மூலம் தனிப்படையினர் ரோந்து
வைகை அணையில் திருட்டுத்தனமாக மீன் பிடிப்பதை தடுக்க படகு மூலம் தனிப்படையினர் ரோந்து சென்றனர்.
வைகை அணை
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. இந்த அணையின் நீர்தேக்க பகுதியில் மீன்வளத்துறை மற்றும் மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் மீன்பிடி தொழில் நடைபெறுகிறது. வைகை அணையை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வைகை அணையில் பிடிக்கப்படும் மீன்களில் சரிபாதி மீன்வளத்துறைக்கு வழங்க வேண்டும். அந்த மீன்களை மீன்வளத்துறை சார்பில் கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தனிப்படை
இந்நிலையில் வைகை அணையின் நீர்தேக்க பகுதியில் திருட்டுத்தனமாக மீன்கள் பிடிக்கப்பட்டு வருவதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து சென்னை மீன்வளத்துறை இயக்குனர் உத்தரவின்படி வைகை அணையில் ரோந்து செல்ல 11 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் வைகை அணை நீர்தேக்கத்தில் படகு மூலமாகவும், அணையின் கரையோர கிராமங்களில் வாகனம் மூலமாகவும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை நடந்த ரோந்து பணியில் வைகை அணையில் திருட்டுத்தனமாக மீன்கள் பிடிப்பதற்காக தண்ணீரில் விரித்து வைத்திருந்த 20 வலைகளை கைப்பற்றியுள்ளனர். மீன் பிடிப்பவர்கள் தண்ணீரில் நீந்தி செல்ல பயன்படுத்தப்படும் டியூப்களையும் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள் விசாரணை
மேலும் அணை பகுதியில் மீன்களை திருடுவதற்காக நீர்தேக்கத்தில் வலைகளை விரித்து வைத்தது யார்? என்பது குறித்து தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்வளத்துறை அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையால் வைகை அணையில் முறையாக பிடிக்கப்படும் மீன்களின் அளவு கணிசமாக அதிகரித்து உள்ளதாகவும், இந்த கண்காணிப்பு பணிகள் தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் திருட்டுத்தனமாக மீன்பிடிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.