மாநில அளவிலான 3-வது தகுதி தேர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில் மாநில அளவிலான 3-வது தகுதி தேர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்.எல்.ஏ. வழங்கினர்.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு உள்அரங்கில் மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில் மாநில அளவிலான 3-வது தகுதி தேர்வு போட்டிகள் 11-ந் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 953 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகள் வயதின் அடிப்படையில் 8 பிரிவுகளாக ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனியாக நடந்தது. இந்த போட்டியை மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
3 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் நிறைவு விழா மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தலைவர் சு.ராஜாங்கம் முன்னிலை வகித்தார்.
தலைவர் ஜி.கணேஷ்கவுரவ் வரவேற்றார். தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்க செயலாளர் வித்யாசாகர், மாவட்ட வாலிபால் சங்க தலைவர் அரவிந்த்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு அழைப்பாளராக சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற 364 பேருக்கு ரூ.4 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் பரிசுத்தொகை மற்றும் கோப்பை வழங்கினர்.
மேலும் பயிற்சியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினர்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கத்தின் துணைத்தலைவர்கள் பி.கே.அரிகிருஷ்ணன், இளங்கோ, பொருளாளர் எஸ்.ராமஜெயம், ஆலோசகர் டி.சவுந்தர்ராஜன் மற்றும் மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் சங்க நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.
முடிவில் செயலாளர் டாக்டர் கே.கமலகண்ணன் நன்றி கூறினார்.