கராத்தே பயிற்சி அளிக்கும் மாஸ்டர்களுக்கு பரிசு, சான்றிதழ்
கராத்தே பயிற்சி அளிக்கும் மாஸ்டர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை டி.ஐ.ஜி. செந்தாமரை கண்ணன் வழங்கினார்.
வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் ஜெயிலில் பணிபுரியும் காவலர்களுக்கு, காவலர்கள் பயிற்சி பள்ளியில் கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வேலூர் வேலப்பாடியில் உள்ள ஜப்பான் ஷிட்டோ ராய் கராத்தே பள்ளியை சேர்ந்த மாஸ்டர்கள் ரமேஷ்-லச்சிமணன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் ஜெயில் காவலர்களுக்கு பல ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகிறார்கள்.
பயிற்சியில், கத்தியால் தாக்குபவரை லத்தி மூலம் மடக்கி பிடிப்பது, ஒரேநேரத்தில் 4 பேர் தாக்கினால் எப்படி சமாளிப்பது, மதுபோதையில் இருப்பவர்களை தப்பி செல்லாதபடி மடக்கி பிடிப்பது எப்படி என்பது உள்பட பல்வேறு தற்காப்பு நவீன உத்திகள் காவலர்களுக்கு கற்று கொடுக்கப்படுகிறது. ஜெயில் காவலர்களுக்கு கராத்தே பயிற்சி அளிக்கும் மாஸ்டர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. செந்தாமரை கண்ணன் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.