கலைத்திருவிழாவில் அசத்திய 600 மாணவர்களுக்கு பரிசு


கலைத்திருவிழாவில் அசத்திய 600 மாணவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 11 Dec 2022 12:30 AM IST (Updated: 11 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்ட அளவில் நடந்த கலைத்திருவிழாவில் அசத்திய 600 மாணவ-மாணவிகளுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி பரிசு வழங்கினார்.

திண்டுக்கல்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் கலைத்திறனை வெளிக்கொண்டு வரும் வகையில், கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 370 பள்ளிகளில் நடந்த கலைத்திருவிழா போட்டிகளில் 87 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு வட்டார அளவில் போட்டி நடத்தப்பட்டது.

வட்டார அளவில் வெற்றி பெற்ற 6 ஆயிரத்து 657 மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் கடந்த 8-ந்தேதி தொடங்கியது. பரதநாட்டியம், கரகாட்டம், தேவராட்டம், பாடல், இசை கருவிகளை இசைத்தல், பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், கவிதை உள்பட பல்வேறு போட்டிகளில் மாணவ-மாணவிகள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.

பரிசளிப்பு விழா

இந்த போட்டிகளில் அசத்திய 600 பேர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனர். இவர்கள் அனைவரும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகினர். இதைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நேற்று திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

விழாவில் காந்திராஜன் எம்.எல்.ஏ, மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாவட்ட கல்வி அலுவலர்கள் பாண்டித்துரை, திருநாவுக்கரசு, ஜெகநாதன், வளர்மதி, ராகவன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மாநகராட்சி மண்டல தலைவர் ஜான்பீட்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.


Next Story