சிறப்பாக பணியாற்றிய ரேஷன் கடை பணியாளர்களுக்கு பரிசுத்தொகை


சிறப்பாக பணியாற்றிய ரேஷன் கடை பணியாளர்களுக்கு பரிசுத்தொகை
x

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ரேஷன் கடை பணியாளர்களுக்கு கலெக்டர் பரிசுத்தொகை வழங்கினார்.

அரியலூர்

ரேஷன் கடைகளில் சிறப்பாக பணியாற்றும் பணியாளர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் சிறப்பாகவும், பொதுமக்கள் வரவேற்கத்தக்க வகையிலும் பணிபுரிந்த அரியலூர் தாலுகா, நாகமங்கலம் ரேஷன் கடை விற்பனையாளர் லெட்சுமிக்கு முதல் பரிசாக ரூ.4 ஆயிரமும், பாராட்டு சான்றிதழும், ஆண்டிமடம் தாலுகா, புதுக்குடி ரேஷன் கடை விற்பனையாளர் துரைமுருகனுக்கு 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், பாராட்டு சான்றிதழும் கலெக்டர் ரமணசரஸ்வதி வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து அவர் சிறப்பாக பணியாற்றிய ஜெயங்கொண்டம் ரேஷன் கடை எண்-1 எடையாளர் இளவரசிக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரமும், பாராட்டு சான்றிதழும், அரியலூர் நகரம் வி.எஸ்.பி. ரேஷன் கடை எண்-2 எடையாளர் வாசுகிக்கு 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும், பாராட்டு சான்றிதழை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்ததுடன், அவர்களை தொடர்ந்து பொதுமக்களுக்கு சிறப்பான முறையில் சேவையாற்ற வேண்டும், என்றார். மேலும் கலெக்டர் ரமணசரஸ்வதி உலக செஞ்சிலுவை தினத்தையொட்டி அரியலூர் இந்தியன் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் நகராட்சியில் பணிபுரியும் 50 தூய்மை பணியாளர்களுக்கு கையுறைகள், முக கவசம் உள்ளிட்ட சுகாதார நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், அரியலூர் நகர் மன்ற தலைவர் சாந்தி கலைவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story