கிருஷ்ணகிரி, ஓசூரில்தடையை மீறி பா.ஜ.க.வினர் ஊர்வலம்பெண்கள் உள்பட 176 பேர் கைது
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி, ஓசூரில் தடையை மீறி பா.ஜ.க.வினர் ஊர்வலம் சென்ற பெண்கள் உள்பட 176 பேர் கைது செய்யப்பட்டனர்.
மவுன ஊர்வலம்
கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 14 மற்றும் 15-ந் தேதி நள்ளிரவில், சுயராஜ்ய சுதந்திர பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கான விதிகள் சட்டப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தன. இதையடுத்து இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டு ஒருங்கிணைந்த இந்தியாவில் வசித்து வந்த முஸ்லிம்கள் தங்கள் விருப்பப்படி இந்தியா அல்லது பாகிஸ்தானின் குடியேற அனுமதிக்கப்பட்டன. இந்த பிரிவினை நடந்த 1947 ஆகஸ்டு 14-ந் தேதியை பாஜனதா கட்சியினர் தேசப் பிரிவினை நாளாக கடைபிடிக்கின்றனர்.
அதன்படி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் நேற்று காலை கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானாவில் இருந்து பழையபேட்டை காந்தி சிலை வரை மாநில செயற்குழு உறுப்பினர் ஹரி கோட்டீஸ்வரன் தலைமையில் மவுன ஊர்வலம் சென்றனர். இதில், மாவட்ட பொதுச்செயலாளர் அர்ச்சுனன், நகர தலைவர் ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் பாலு, மாவட்ட பிரசார பிரிவு துணைத்தலைவர் தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தடையை மீறி ஊர்வலம் சென்ற 26 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்
இதேபோன்று ஓசூர் ராம் நகர் அண்ணா சிலை அருகில் இருந்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பா.ஜனதா மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில் நிர்வாகிகள் தடையை மீறி அமைதி ஊர்வலம் செல்ல முயன்றனர். ஆனால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, பா.ஜ.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், மாவட்ட தலைவர் மற்றும் 20 பெண்கள் உள்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தனியார் மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டனர். கைதான அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.